சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.010   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அலை, வளர் தண்மதியோடு அயலே
பண் - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
Audio: https://www.youtube.com/watch?v=yEKUo3iRd8c
3.101   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரிதரு மா மணி நாகம்
பண் - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
Audio: https://www.youtube.com/watch?v=00rDmeArPjg
4.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
பண் - திருநேரிசை   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)
Audio: https://www.youtube.com/watch?v=Ry6uuPOzyEY

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.010   அலை, வளர் தண்மதியோடு அயலே  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருஇராமேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு பர்வதவர்த்தனி உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.

[1]
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

[2]
மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால்
கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்,
ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.

[3]
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!

[4]
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும்,
வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர்
ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.

[5]
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,
பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய
இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்,
துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே.

[6]
சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன,
முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட,
இனி அருள் நல்கிடு! என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்,
பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!

[7]
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன் பெயர் சாய் கெட,
அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும்
இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே!

[8]
சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார்
வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால்,
ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள் ஆகவே!

[10]
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.101   திரிதரு மா மணி நாகம்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஇராமேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு பர்வதவர்த்தனி உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய்,
நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,
விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!

[1]
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு உமை பாட,
தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய,
மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும் செயலே!

[2]
அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம்
மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும்
செயலே!

[3]
மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட,
தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும்
செயலே!

[4]
சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு இடம் ஆக,
கோல நல் மாது உடன்பாட, ஆடும் குணமே குறித்து உணர்வார்
ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
நீலம் ஆர் கண்டம் உடைய, எங்கள் நிமலர்; செயும்
செயலே!

[5]
கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக்
காய்ந்தவர் தாம்
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி, நல்ல
இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும்
செயலே!

[6]
நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி,
ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய,
காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்;
செயும் செயலே!

[7]
பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை
ஆக,
மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சி
என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார்,
கொளும் கொள்கையே!

[8]
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆய
மேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை, மெய்ம்மை
ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும் செயலே!

[9]
பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்,
பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல் கேளாதே,
இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம் மேய,
பல்-நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும் செயலே!

[10]
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.061   பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருஇராமேச்சுரம் ; (திருத்தலம் அருள்தரு பர்வதவர்த்தனி உடனுறை அருள்மிகு இராமநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து, தக்க
வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு, மதியினால் மால் செய் கோயில்
நேசம் மிக்கு அன்பினாலே நினைமின், நீர், நின்று நாளும்!
தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுர(ம்)மே.

[1]
முற்றின, நாள்கள் என்று முடிப்பதே காரணம்(ம்) ஆய்
உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைப்
பற்றி, நீ பரவு,-நெஞ்சே!-படர்சடை ஈசன்பாலே!

[2]
கடல் இடை மலைகள் தம்மால் அடைத்து, மால், கருமம் முற்றி,
திடல் இடைச் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தொடல் இடை வைத்து நாவில் சுழல்கின்றேன், தூய்மை இன்றி,
உடல் இடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு, நானே.

[3]
குன்று போல்-தோள் உடைய குணம் இலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையால் செய்த கோயில்-
நன்று போல் நெஞ்சமே! நீ நன்மையை அறிதியாயில்,
சென்று நீ தொழுது உய்கண்டாய்!-திரு இராமேச்சுர(ம்)மே.

[4]
வீரம் மிக்கு எயிறு காட்டி விண் உற நீண்டு அரக்கன்
கூரம் மிக்கவனைச் சென்று கொன்று உடன் கடல் படுத்துத்
தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே.

[5]
ஆர், வலம் நம்மின் மிக்கார்?’ என்ற அவ் அரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்
சேர்,-மட நெஞ்சமே!-நீ செஞ்சடை எந்தைபாலே!

[6]
வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான்
தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.

[7]
பலவும் நாள் தீமை செய்து பார் தன் மேல் குழுமி வந்து
கொலை விலார் கொடியர் ஆய அரக்கரைக் கொன்று வீழ்த்த,
சிலையினான் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம்; தவம் அது ஆமே.

[8]
கோடி மா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு,
தேடி, மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நாடி வாழ்!-நெஞ்சமே, நீ!-நன்நெறி ஆகும் அன்றே.

[9]
வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.

[10]
வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர் கோனை
விரைய முற்று அற ஒடுக்கி, மீண்டு மால் செய்த கோயில்-
திரைகள் முத்தால் வணங்கும்-திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தால் உரைப்பார், உள்குவார், அன்பினாலே.

[11]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D