சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புவம், வளி, கனல், புனல்,
பண் - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Sa2JXIHZsfQ
1.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இன்குரல் இசை கெழும் யாழ்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XgZQga40iFg
1.125   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை மலி அகல் அல்குல்
பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GaQYSPNIl58
6.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவன் காண்; வானவர்க்கும் மேல்
பண் - திருத்தாண்டகம்   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qd5E5qODrUk

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.021   புவம், வளி, கனல், புனல்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருச்சிவபுரம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாயகர் திருவடிகள் போற்றி )
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

[1]
மலை பல வளர் தரு புவி இடை மறை தரு வழி மலி மனிதர்கள்,
நிலை மலி சுரர் முதல் உலகுகள், நிலை பெறு வகை நினைவொடு மிகும்
அலை கடல் நடுவு அறிதுயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதில் சிவபுரம் நினைபவர் திரு மகளொடு திகழ்வரே.

[2]
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.

[3]
நறை மலிதரும் அளறொடு, முகை, நகு மலர், புகை, மிகு வளர் ஒளி,
நிறை புனல் கொடு, தனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவு இல பதம் அணை தர அருள் குணம் உடை இறை உறை வன பதி
சிறை புனல் அமர் சிவபுரம் அது நினைபவர் செயமகள் தலைவரே.

[4]
சினம் மலி அறுபகை மிகு பொறி சிதை தரு வகை வளி நிறுவிய
மனன் உணர்வொடு மலர் மிசை எழுதரு பொருள் நியதமும் உணர்பவர்
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில்
கனம் மருவிய சிவபுரம் நினைபவர் கலைமகள் தர நிகழ்வரே.

[5]
சுருதிகள் பல நல முதல் கலை துகள் அறு வகை பயில்வொடு மிகு
உரு இயல் உலகு அவை புகழ்தர, வழி ஒழுகும் மெய் உறு பொறி ஒழி
அருதவம் முயல்பவர், தனது அடி அடை வகை நினை அரன் உறை பதி,
திரு வளர் சிவபுரம், நினைபவர் திகழ் குலன் நிலன் இடை நிகழுமே.

[6]
கதம் மிகு கரு உருவொடு உகிர் இடை வடவரை கணகண என,
மதம் மிகு நெடுமுகன் அமர் வளைமதி திகழ் எயிறு அதன் நுதிமிசை,
இதம் அமர் புவி அது நிறுவிய எழில் அரி வழி பட, அருள் செய்த
பதம் உடையவன் அமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர், படியிலே.

[7]
அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.

[8]
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.

[9]
குணம் அறிவுகள் நிலை இல, பொருள் உரை மருவிய பொருள்களும் இல,
திணம் எனுமவரொடு, செதுமதி மிகு சமணரும், மலி தமது கை
உணல் உடையவர், உணர்வு அரு பரன் உறை தரு பதி உலகினில் நல
கணம் மருவிய சிவபுரம் நினைபவர் எழில் உரு உடையவர்களே.

[10]
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.112   இன்குரல் இசை கெழும் யாழ்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருச்சிவபுரம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாயகர் திருவடிகள் போற்றி )
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.

[1]
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

[2]
மலைமகள் மறுகிட, மதகரியைக்
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே
சிலை மல்கு மதில் அணி சிவபுரமே.

[3]
மண், புனல், அனலொடு, மாருதமும்,
விண், புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல்வழி வண்டு கெண்டிச்
செண்பகம் அலர் பொழில் சிவபுரமே.

[4]
வீறு நன்கு உடையவள் மேனி பாகம்
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்-
நாறு நன் குர விரி வண்டு கெண்டித்
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே.

[5]
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே.

[6]
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்-
வில் வண்டு அமர்தரு பொய்கை அன்னச்-
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே.

[7]
எழில் மலை எடுத்த வல் இராவணன் தன்
முழுவலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து,
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே.

[8]
சங்கு அளவிய கையன், சதுர்முகனும்,
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்-
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

[9]
மண்டையின், குண்டிகை, மாசு தரும்,
மிண்டரை விலக்கிய விமலன் நகர்-
பண்டு அமர்தரு பழங்காவிரியின்
தெண்திரை பொருது எழு சிவபுரமே.

[10]
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்-
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.125   கலை மலி அகல் அல்குல்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருச்சிவபுரம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாயகர் திருவடிகள் போற்றி )
கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

[1]
படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம்
இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.

[2]
வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர்கதியினரே.

[3]
துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு
பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணிமிடறனது அடி இணை தொழுமவரே.

[4]
மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,
இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவு என உடையவன், எமை உடையவனே.

[5]
முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,
அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்;
எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.

[6]
வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,
செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.

[7]
கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்
உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை
பரன் என அடியவர் பணிதரு, சிவபுர-
நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.

[8]
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.

[9]
புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை
வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம்
இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

[10]
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-
பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை
சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.087   வானவன் காண்; வானவர்க்கும் மேல்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருச்சிவபுரம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாயகர் திருவடிகள் போற்றி )
வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்; வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன் காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்;   கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[1]
நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்; பூதகணம் ஆட ஆடும்
சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும்
பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்;   புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற
திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[2]
வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்; மலரவன், மால், காண்பு அரிய மைந்தன் தான் காண்;
கம்ப மதக்கரி பிளிற உரி செய்தோன் காண்; கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்;
அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்; அயவந்தி உள்ளான் காண்; ஐயாறன் காண்;
செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[3]
பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி, அருள்கள் செய்த
முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும்   வானவர்க்கும் முதல் ஆய் மிக்க
அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில்   பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[4]
தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்;
தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான் கொள் செங்கை எம்பெருமான் தான் காண்;
ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆயினான் காண்;
சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[5]
பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்; பயிர் வளர்க்கும் துளி அவன் காண்; துளியில் நின்ற
நீர் அவன் காண்; நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்; நில வேந்தர் பரிசு ஆக நினைவு உற்று ஓங்கும்
பேரவன் காண்; பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது, பலநாளும் வழிபட்டு, ஏத்தும்
சீரவன் காண்; சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[6]
வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்;
மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்; வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்;
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[7]
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும் கருத்தன் காண்; திருத்தம் ஆகி,
மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண் ஆகி, நின்றான் தான் காண்;
தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ, ஒரு விரலால் சாதித்து, ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

[8]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list