சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
பண் - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vMdjKpqwUzU
Audio: https://sivaya.org/audio/1.018 thoduaiya.mp3
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
பண் - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0Tjzc5wDpvw
7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
பண் - நட்டராகம்   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DhIte7qQ1tE
7.065   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திருவும், வண்மையும், திண் திறல்
பண் - தக்கேசி   (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TW8UJKpo5w4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.018   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருநின்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

[1]
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.

[2]
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!

[3]
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!

[4]
குழலின் இசை வண்டின் இசை கண்டு, குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்,
அழலின் வலன் அங்கையது ஏந்தி, அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகணே.
[5]
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒரு பாகம்,
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த
வீரன், மலி அழகு ஆர் பொழில் மிடையும் திரு நின்றி
யூரன், கழல் அல்லாது, எனது உள்ளம் உணராதே!

[6]
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.

[7]
நல்ல மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்,
அல்லர் என, ஆவர் என, நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலை ஆர் எம்
செல்வர் அடி அல்லாது, என சிந்தை உணராதே!

[8]
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவு இல் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே,
நெறி இல்லவர் குறிகள் நினையாதே, நின்றியூரில்
மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே!

[9]
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவு ஆக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்று ஆர்தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.023   கொடுங் கண் வெண்தலை கொண்டு,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநின்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
கொடுங் கண் வெண்தலை கொண்டு, குறை விலைப்
படும் கண் ஒன்று இலராய், பலி தேர்ந்து உண்பர்-
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க்
கடுங் கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

[1]
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை
நீதியே கொளப்பாலது?-நின்றியூர்
வேதம் ஓதி, விளங்கு வெண் தோட்டராய்,
காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே.

[2]
புற்றின் ஆர் அரவம் புலித்தோல்மிசைச்
சுற்றினார்; சுண்ணப் போர்வை கொண்டார்; சுடர்
நெற்றிக்கண் உடையார்; அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

[3]
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும், மல்கி அயல் எலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[4]
சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்,
இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ?
நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்
பனையின் ஈர் உரி போர்த்த பரமரே!

[5]
உரைப்பக் கேண்மின், நும் உச்சி உளான்தனை!
நிரைப் பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன்கற்றையர் ஆர் இவரோ? எனில்,
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

[6]
கன்றி ஊர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால்; இது என்கொலோ?
நின்றியூர் பதி ஆக நிலாயவன்,
வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே.

[7]
நிலை இலா வெள்ளைமாலையன், நீண்டது ஓர்
கொலை விலால் எயில் எய்த கொடியவன்,
நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
உரையினால்-தொழுவார் வினை ஓயுமே.

[8]
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டு ஆகிலும்
நெஞ்சம்! வாழி! நினை, நின்றியூரை நீ!
இஞ்சிமா மதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

[9]
எளியனா மொழியா இலங்கைக்கு இறை,
களியினால் கயிலாயம் எடுத்தவன்,
நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
அளியினால்-தொழுவார் வினை அல்குமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.019   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருநின்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

[1]
வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்;
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.

[2]
அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ,
சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்;
மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .

[3]
ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல்
ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா
நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே.

[4]
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார்
நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

[5]
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

[6]
தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்;
மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்-
அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய்
நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

[7]
எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள்
பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.

[8]
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப,
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க,
நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .

[9]
வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்-
தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும்
மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச்
சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .

[10]
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ-
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்,
பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.065   திருவும், வண்மையும், திண் திறல்  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருநின்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமிவரதர் திருவடிகள் போற்றி )
திருவும், வண்மையும், திண் திறல் அரசும், சிலந்தியார் செய்த செய் பணிகண்டு-
மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்-
பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி,
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி, திரட்டும் தென் திரு நின்றியூரானே! .

[1]
அணி கொள் ஆடை, அம் பூண், மணி மாலை, அமுது செய்த அமுதம், பெறு சண்டி;
இணை கொள் ஏழ்-எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திரு நாவினுக்கு அரையன்;
கணை கொள் கண்ணப்பன்; என்று இவர் பெற்ற காதல் இன் அருள் ஆதரித்து அடைந்தேன்-
திணை கொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

[2]
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணிக் கலசங்கள் ஏந்தி, ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப,
பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்-
சித்தர், வானவர், தானவர், வணங்கும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

[3]
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து, தன் முலைக் கலசங்கள் ஏந்தி,
சுரபி பால் சொரிந்து, ஆட்டி, நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம் படக் கேட்டு,
பரவி உள்கி, வன் பாசத்தை அறுத்து, பரம! வந்து, நுன் பாதத்தை அடைந்தேன்-
நிரவி நித்திலம், அத் தகு செம்பொன், அளிக்கும் தென் திரு நின்றியூரானே! .

[4]
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து, வானநாடு நீ ஆள்க! என அருளி,
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மா மணி அணி திருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்-
செந் தண் மா மலர்த் திருமகள் மருவும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

[5]
காது பொத்தர் ஐக் கின்னரர், உழுவை, கடிக்கும் பன்னகம், பிடிப்ப(அ)ரும் சீயம்,
கோது இல் மா தவர் குழு உடன், கேட்பக் கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர;
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு, நின் இணை அடி அடைந்தேன்-
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே! .

[6]
கோடு நான்கு உடைக் குஞ்சரம் குலுங்க, நலம் கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண் மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்-
பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக்கிள்ளையும், எனப் பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே! .

[7]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list