திருமுறை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
1 திரு ஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம் -திருமுகப் பாசுரம் ()
2 காரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1 -திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் (திருவாலங்காடு (பழையனூர்))
3 காரைக்கால் அம்மையார் - திரு இரட்டை மணிமாலை -திரு இரட்டை மணிமாலை ()
4 காரைக்கால் அம்மையார் - அற்புதத் திருவந்தாதி -அற்புதத் திருவந்தாதி ()
5 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா சேத்திரத் -திருக்கோயில் திருவெண்பா சேத்திரத் ()
6 சேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி -பொன்வண்ணத்தந்தாதி (கோயில் (சிதம்பரம்))
7 சேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை -திருவாரூர் மும்மணிக்கோவை (திருவாரூர்)
8 சேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞான உலா -திருக்கயிலாய ஞான உலா (திருக்கயிலாயம்)
9 நக்கீரதேவ நாயனார் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி -கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி (திருக்கயிலாயம்)
10 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது -திருஈங்கோய்மலை எழுபது (திருஈங்கோய்மலை)
11 நக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை -திருவலஞ்சுழி மும்மணிக்கோவை (திருவலஞ்சுழி)
12 நக்கீரதேவ நாயனார் - திருஎழு கூற்றிருக்கை -திருஎழு கூற்றிருக்கை ()
13 நக்கீரதேவ நாயனார் - பெருந்தேவ பாணி -பெருந்தேவ பாணி ()
14 நக்கீரதேவ நாயனார் - கோபப் பிரசாதம் -கோபப் பிரசாதம் ()
15 நக்கீரதேவ நாயனார் - கார் எட்டு -கார் எட்டு ()
16 நக்கீரதேவ நாயனார் - போற்றித் திருக்கலி வெண்பா -போற்றித் திருக்கலி வெண்பா ()
17 நக்கீரதேவ நாயனார் - திருமுருகாற்றுப்படை -திருமுருகாற்றுப்படை (ஆறுபடை வீடு)
18 நக்கீரதேவ நாயனார் - திருக்கண்ணப்பதேவர் திருமறம் -திருக்கண்ணப்பதேவர் திருமறம் ()
19 கல்லாடதேவ நாயனார் - திருக்கண்ணப்பதேவர் திருமறம் -திருக்கண்ணப்பதேவர் திருமறம் ()
20 கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை -மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை ()
21 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை -சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை ()
22 கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி -சிவபெருமான் திருவந்தாதி ()
23 பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி -சிவபெருமான் திருவந்தாதி ()
24 இளம்பெருமான் அடிகள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை -சிவபெருமான் திருமும்மணிக்கோவை ()
25 அதிராவடிகள் - மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை -மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ()
26 பட்டினத்துப் பிள்ளையார் - கோயில் நான்மணிமாலை -கோயில் நான்மணிமாலை (கோயில் (சிதம்பரம்))
27 பட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை -திருக்கழுமல மும்மணிக் கோவை (சீர்காழி)
28 பட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை -திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (திருவிடைமருதூர்)
29 பட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி -திருஏகம்பமுடையார் திருவந்தாதி (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))
30 பட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது -திருவொற்றியூர் ஒருபா ஒருபது (திருவொற்றியூர்)
31 நம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை -திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை (திருநாரையூர்)
32 நம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் -கோயில் திருப்பண்ணியர் விருத்தம் (கோயில் (சிதம்பரம்))
33 நம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி -திருத்தொண்டர் திருவந்தாதி ()
34 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி -ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி ()
35 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் -ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ()
36 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை -ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை ()
37 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை -ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை ()
38 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் -ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் ()
39 நம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருத்தொகை -ஆளுடையபிள்ளையார் திருத்தொகை ()
40 நம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை -திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை ()
Back to Top
திரு ஆலவாய் உடையார் திருமுகப் பாசுரம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.001  
திருமுகப் பாசுரம்
பண் - ( )
மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயின் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
| [1] |
Back to Top
காரைக்கால் அம்மையார் திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
11 -ஆம் திருமுறை பதிகம் 11.002  
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
பண் - (திருவாலங்காடு (பழையனூர்) )
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே.
| [1] |
Back to Top
காரைக்கால் அம்மையார் திரு இரட்டை மணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.003  
திரு இரட்டை மணிமாலை
பண் - ( )
கிளர்ந்துந்து வெந்துயர் வந்தடும் போதஞ்சி நெஞ்சமென்பாய்த் தளர்ந்திங் கிருத்தல் தவிர்திகண் டாய்தள ராதுவந்தி வளர்ந்துந்து கங்கையும் வானத் திடைவளர் கோட்டுவெள்ளை இளந்திங் களும்எருக் கும்இருக் குஞ்சென்னி ஈசனுக்கே.
| [1] |
Back to Top
காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.004  
அற்புதத் திருவந்தாதி
பண் - ( )
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
| [1] |
Back to Top
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.005  
திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
பண் - ( )
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே தில்லைச்சிற் றம்பலமே சேர்.
| [1] |
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.006  
பொன்வண்ணத்தந்தாதி
பண் - (கோயில் (சிதம்பரம்) )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
| [1] |
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.007  
திருவாரூர் மும்மணிக்கோவை
பண் - (திருவாரூர் )
விரிகடல் பருகி அளறுபட் டன்ன கருநிற மேகம் கல்முக டேறி நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி பொலங்குழை மின்னப் புருவ வில்லிட் டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக் கைத்தலம் என்னும் காந்தள் மலர முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக் குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக் கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத் தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா மணியும் பொன்னும் மாசறு வயிரமும் அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக் கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப் பொங்குபுயல் காட்டி யோளே கங்கை வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல் ஆரூர் எல்லையில் இரும்பலி சொரியும் கல்லோ சென்ற காதலர் மனமே.
| [1] |
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் திருக்கயிலாய ஞான உலா
11 -ஆம் திருமுறை பதிகம் 11.008  
திருக்கயிலாய ஞான உலா
பண் - (திருக்கயிலாயம் )
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண் அருமால் உற அழலாய் நின்ற பெருமான்
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.009  
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
பண் - (திருக்கயிலாயம் )
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருஈங்கோய்மலை எழுபது
11 -ஆம் திருமுறை பதிகம் 11.010  
திருஈங்கோய்மலை எழுபது
பண் - (திருஈங்கோய்மலை )
அடியும் முடியும் அரியும் அயனும் படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால், இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம் மன்னதென நின்றான் மலை.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.011  
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பண் - (திருவலஞ்சுழி )
வணங்குதும் வாழி நெஞ்சே புணர்ந்துடன் பொருகடல் முகந்து கருமுகிற் கணம்நற் படஅர வொடுங்க மின்னிக் குடவரைப் பொழிந்து கொழித்திழி அருவி குணகடல் மடுக்குங் காவிரி மடந்தை வார்புனல் உடுத்த மணிநீர் வலஞ்சுழி அணிநீர்க் கொன்றை அண்ணல தடியே.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருஎழு கூற்றிருக்கை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.012  
திருஎழு கூற்றிருக்கை
பண் - ( )
ஒருடம் பீருரு வாயினை ஒன்றுபுரிந் தொன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை மூவிலைச் சூலம் ஏந்தினை சுடருஞ் சென்னி மீமிசை இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை: ஒருகணை இருதோள் செவியுற வாங்கி மூவெயில் நாற்றிசை முரணரண் செகுத்தனை ஆற்ற முன்னெறி பயந்தனை செறிய இரண்டும் நீக்கி ஒன்று நினைவார்க் குறுதி ஆயினை அந்நெறி ஒன்று மனம்வைத் திரண்டு நினைவிலோர்க்கு முன்னெறி உலகங் காட்டினை அந்நெறி நான்கென ஊழிதோற்றினை சொல்லும் ஐந்தலை அரவசைத் தசைந்தனை
நான்முகன் மேல்முகக் கபாலம் ஏந்தினை நூன்முக முப்புரி மார்பில் இருவர் அங்கம் ஒருங்குடன் ஏந்திய ஒருவநின் ஆதி காணா திருவர் மூவுல குழன்று நாற்றிசை ஊழிதர
ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை ஆறுநின் சடையது ஐந்துநின் நிலையது நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே இரண்டுநின் குழையே ஒன்றுநின் ஏறே ஒன்றிய காட்சி உமையவள் நடுங்க
இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி முத்தீ நான்மறை ஐம்புலன் அடக்கிய அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை ஏழில் இன்னரம் பிசைத்தனை ஆறில் அமுதம் பயந்தனை ஐந்தில் விறலியர்கொட்டும் அழுத்த ஏந்தினை ஆல நீழல் அன்றிருந் தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை நன்றி இல்லா முந்நீர்ச் சூர்மாக் கொன்றங் கிருவரை எறிந்த ஒருவன்
தாதை ஒருடல் திருவடி வாயினை தருமம் மூவகை உலகம் உணரக் கூறுவை நால்வகை இலக்கண இலக்கியம் நலத்தக மொழிந்தனை ஐங்கணை யவனொடு காலனை அடர்த்தனை அறுவகைச் சமயமும் நெறிமையில் வகுத்தனை ஏழின் ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க் கேட்டவன் தலையளி பொருந்தினை ஆறிய சிந்தை யாகி ஐங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன் நாற்றோள் நலனே நந்திபிங் கிருடியென் றேற்ற பூதம் மூன்றுடன் பாட இருகண் மொந்தை ஒருகணம் கொட்ட மட்டுவிரி அலங்கல் மலைமகள் காண நட்டம் ஆடிய நம்ப அதனால்
சிறியேன் சொன்ன அறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய அண்ணல் பாதம் சென்னியிற் பரவுவன் பணிந்தே.
பணிந்தேன்நின் பாதம் பரமேட்டீ பால்நீ றணிந்தால வாயில் அமர்ந்தாய் தணிந்தென்மேல் மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே ஐயுறவொன் றின்றி அமர்ந்து.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் பெருந்தேவ பாணி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.013  
பெருந்தேவ பாணி
பண் - ( )
சூல பாணியை சுடர்தரு வடிவனை நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை கீதம் பாடியை கிளர்பொறி அரவனை போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை ஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை
சாதி வானவர் தம்பெரு மான்தனை வேத விச்சையை விடையுடை அண்ணலை ஓத வண்ணனை உலகத் தொருவனை நாத னாகிய நன்னெறிப் பொருளினை மாலை தானெரி மயானத் தாடியை வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை வேத வேள்வியை விண்ணவர் தலைவனை ஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை ஆயிர நூற்றுக் கறி வரியானை பேயுருவு தந்த பிறையணி சடையனை
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை கூரிய மழுவனை கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்றருள் சிவனை பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை பீடுடை யாற்றை பிராணி தலைவனை
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை ஈசனை இறைவனை ஈறில் பெருமையை நேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை தாதணி மலரனை தருமனை பிரமனை காதணி குழையனை களிற்றின் உரியனை சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை வித்தக விதியனை தீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை பிரமன் பெருந்தலை நிறைவ தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை
ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே புண்ணியம் நீயே புனிதன் நீயே பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே ஊழியும் நீயே உலகமும் நீயே வாழியும் நீயே வரதனும் நீயே
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே மூவரும் நீயே முன்னெறி நீயே மால்வரை நீயே மறிகடல் நீயே இன்பமும் நீயே துன்பமும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே விண்முதற்பூதம் ஐந்தவை நீயே புத்தியும் நீயே முத்தியும் நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ தறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே ஆற்றவும்நீ செய்யும் அருள்.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.014  
கோபப் பிரசாதம்
பண் - ( )
தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே வெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும் அண்ட வாணனுக் காழிஅன் றருளியும் உலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்
கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியம் கடிபடி பூங்கணைக் காம னாருடல் பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த மானுட னாகிய சண்டியை வானவன் ஆக்கியும் மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும் கூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும் கடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும் பருவரை சிலையாப் பாந்தள் நாணாத்
திரிபுரம் எரிய ஒருகணை துரந்தும் கற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு தற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும் கூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும் தோற்றிய வாரணத் தீருரி போர்த்தும் நெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும் நற்றா நந்தீச் சுவரற் கருளியும் அறிவினை ஓரா அரக்க னாருடல் நெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும் திருவுரு வத்தொடு செங்கண் ஏறும்
அரியன திண்திறல் அசுரனுக் கருளியும் பல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து மல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும் தக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து மிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும்
செந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும் பைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும் கதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும் நிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும் சலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும் மறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும் தாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும் சீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும் கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும் ஆலின் கீழிருந் தறநெறி அருளியும்
இன்னவை பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதங் கூறுங் காலைக் கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன் புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன் உரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர்
அங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர் ஒடுங்காப் பெருமை உம்பர் கோனை அடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக் கிருமி நாவாற் கிளத்தும் தரமே அதாஅன்று ஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும் மூவகைக் குணமும் நால்வகை வேதமும் ஐவகைப் பூதமும் அறுவகை இரதமும் எழுவகை ஓசையும் எண்வகை ஞானமும் ஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும் பத்தின் வகையும் ஆகிய பரமனை
இன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச் செம்பொனை மணியினைத் தேனினைப்பாலினைத் தஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம் நெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர் செந்தழற் பவளச் சேணுறு வரையனை
முக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக் கள்ளங் கைவிட் டுள்ளம துருகிக் கலந்து கசிந்துதன் கழலினை யவையே நினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத் தேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்
பாவ நாசனைப் படரொளி உருவனை வேயார் தோளி மெல்லியல் கூறனைத் தாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச் சொல்லும் பொருளும் ஆகிய சோதியைக் கல்லுங் கடலும் ஆகிய கண்டனைத் தோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை நீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை வாக்கும் மனமும் இறந்த மறையனைப் பூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை இனைய தன்மையன் என்றறி வரியவன்
தனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர் மாமுயல் விட்டுக் காக்கைப் பின்போம் கலவர் போலவும் விளக்கங் கிருக்க மின்மினி கவரும் அளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்
கச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக் கொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப் பிச்சரைப் போலஓர் ஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று வட்டணை பேசுவர் மானுடம் போன்று பெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன் தலைமீன் தலைஎண் பலமென்றால் அதனை அறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின் மத்திர மாகுவர் மாநெறி கிடப்பவோர் சித்திரம் பேசுவர் தேவ ராகில்
இன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர் என்றறிய உலகின் முன்னே உரைப்ப தில்லை ஆகிலும் மாடு போலக் கூடிநின் றழைத்தும் மாக்கள் போல வேட்கையீ டுண்டும் இப்படி ஞானம் அப்படி அமைத்தும் இன்ன தன்மையன் என்றிரு நிலத்து முன்னே அறியா மூர்க்க மாக்களை இன்னேகொண் டேகாக் கூற்றம் தவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் கார் எட்டு
11 -ஆம் திருமுறை பதிகம் 11.015  
கார் எட்டு
பண் - ( )
அரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல் விரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள் அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே கைச்சங்கம் போல்முழங்குங் கார்.
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் போற்றித் திருக்கலி வெண்பா
11 -ஆம் திருமுறை பதிகம் 11.016  
போற்றித் திருக்கலி வெண்பா
பண் - ( )
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.017  
திருமுருகாற்றுப்படை
பண் - (ஆறுபடை வீடு )
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை 5 மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் உள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத் திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் 10 துருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் 15 பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் 20 செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25 துவர முடித்த துகள்அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30 வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35 வேங்கை நுண்தா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40 சூர்அர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் 45 சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட் 50 டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55 நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத் 60 தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்
இரவலன் நிலைசேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும் செவ்வநீ நயந்தனை ஆயின் பலவுடன் நன்னர் நெஞ்சத் தின்நசை வாய்ப்ப 65 இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
திருப்பரங்குன்றம்செருப்புகன் றெடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70 மாடம்மலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 75 அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன் றமர்ந் துறைதலும் உரியன் அதாஅன்று.
திருச்சீரலைவாய்வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஒடையொடு துயல்வரப் 80 படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண் டைவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 85 மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் 90 மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் 95 மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் 100 கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் 105 செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை 110 அசைஇய தொருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை 115 கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடின் படுமணி இரட்ட ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் 120 பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந் திசைப்ப வால்வளை ஞரல உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ 125 விசும் பாறாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று
திருஆவினன்குடிசீரை தைஇய உடுக்கையர் சீரொடு 130 வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசற விளங்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு 135 செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவனர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 140 துனியில் காட்சி முனிவர் முன்புகப் புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 145 மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல் 150 மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பலவரிக் கொழுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு 155 வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் 160 தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் 165 பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் பகலில் தோன்றும் இகலில் காட்சி 170 நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந்த தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட 175 உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன் 180 அதா அன்று
திருஏரகம்இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் டாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புல உடீஇ உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190 தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந் தேரகத் துறைதலும் உரியன் அதாஅன்று
குன்றுதோறாடல்பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் 195 அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் 200 குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் 205 முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 210 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் 215 கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி 220 மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே அதா அன்று
பழமுதிர்சோலைசிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ 225 ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறி அயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் 230 சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி 235 முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொ விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் 240 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி 245 இமிழிசை அருவியோ டின்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் 250 ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஒடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே 255 ஆண்டாண் டாயினும் ஆக காண்தக முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 260 அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 265 வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே 270 வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக 275 நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெஎழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 280 சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு 285 புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் குறித்தது மொழியா அளவையில் குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் 290 வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் 295 மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன் றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத் தொருநீ யாகித் தோன்ற விழுமிய 300 பெறலரும் பரிசில் நல்கும்மதி பலவுடன் வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந் தாரம் முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த 305 தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 310 முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 315 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொ டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம் பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட் 320 டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின் றிழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. 323
| [1] |
Back to Top
நக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.018  
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பண் - ( )
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து விருப்புடைத் தம்ம விரிகடல் உலகே பிறந்தது தேன்அழித் தூனுண் கானவர் குலத்தே திரிவது பொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது செங்கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது வெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய அந்தமில் படைக்கலம் அவையே உறைவது குறைதசை பயின்று குடம்பல நிரைத்துக் கறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு பீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை
வாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார் இரவும் பகலும் இகழா முயற்றியொடும் அடைத்த தேனும் வல்நாய் விட்டும் சிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும் பலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத் தொல்லுயிர் கொல்லுந் தொழிலே வடிவே மறப்புலி கடித்த வன்திரள் முன்கை திறற்படை கிழித்த திண்வரை அகலம் எயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி அயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு
செடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண் கடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத் தடுபடை பிரியாக் கொடுவிற லதுவே மனமே மிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள் அகப்படு துயருக் ககனமர்ந் ததுவே இதுவக் கானத் தலைவன் தன்மை கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது
வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே அதாஅன்று கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற் சுட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத் தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து எய்து துணித்திடும் துணித்த விடக்கினை விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு
அண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத் தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால் மஞ்சன மாக முகந்து மலரெனக் குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும் வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில் திருக்கா ளத்தி எய்தி சிவற்கு வழிபடக் கடவ மறையோன் முன்னம் துகிலிடைச் சுற்றியில் தூநீர் ஆட்டி
நல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி சொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும் பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித் தருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித் திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி மந்திரம் எண்ணி வலம்இடம் வந்து விடைகொண் டேகின பின்தொழில் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்
தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா அன்பொடு கானகம் அடையும் அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி ஆத ரிக்கும் அந்தணன் வந்து சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்
பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும் இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று கரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப் பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று வந்தவன் செய்து போயின வண்ணம் சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு மற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ உற்றது கேட்டருள் உன்தனக் கழகா நாடொறும் நான்செய் பூசனை தன்னை
ஈங்கொரு வேடுவன் நாயொடும் புகுந்து மிதித் துழக்கித் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை நின்திருக் கோயிலில் இட்டுப் போமது என்றும் உன்தனக் கினிதே எனையுருக் காணில் கொன்றிடும் யாவ ராலும் விலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன் திருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக்
கனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச் சீரார் திருக்கா ளத்தியுள் அப்பன் பிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக் கறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை நெற்றி நாட்டத்து நிறைநீற் றாக ஒற்றை மால்விடை உமையொரு மருங்கில் திருவுருக் காட்டி அருளிப் புரிவொடு பூசனை செய்யும் குனிசிலை வேடன் குணமவை ஆவன உரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்
அவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே அவன் செருப்படி யாவன விருப்புறு துவலே எழிலவன் வாயது தூயபொற் குடமே அதனில் தங்குநீர் கங்கையின் புனலே புனற்கிடு மாமணி அவன் நிறைப் பல்லே அதற்கிடு தூமலர் அவனது நாவே உப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப் புன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே அவன்தலை தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த அங்குலி கற்பகத் தலரே அவனுகந்
திட்ட இறைச்சி எனக்குநன் மாதவர் இட்ட நெய்பால் அவியே இதுவெனக் குனக்கவன் கலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை நலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று இறைவன் எழுந் தருளினன் அருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து மனமிகக் கூசி வைகறைக் குளித்துத் தான்முன் செய்வதோர் பொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து
தோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும் வான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக் கடும்பகல் வேட்டையிற் காதலித் தடிந்த உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும் செல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன் திருமேனியின் மூன்று கண்ணாய் ஆங்கொரு கண்ணில் உதிரம் ஒழியா தொழுக இருந்தன னாகப் பார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று
வாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக் கையில் ஊனொடு கணைசிலை சிந்த நிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச் சிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர் அடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு இன்மை கண்டு நன்மையில் தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும் நெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென் அத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என் றன்பொடுங் கனற்றி
இத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன் கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன் அப்பலுங் குருதி நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும் நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன் றின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித் தருளினன் அருளலும் விண்மிசை வானவர் மலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம் துந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும் ஏத்தினர் இன்னிசை வல்லே சிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே.
தனி வெண்பா தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப் பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும் திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக் கண்ணப்ப னாய்நின்றான் காண்.
| [1] |
Back to Top
கல்லாடதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.019  
திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பண் - ( )
பரிவின் தன்மை உருவுகொண் டனையவன் போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எஃகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன் தோல்நெடும் பையில் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன் உழுவைக் கூனுகிர்க் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன் நீலப் பீலி நெற்றி சூழ்ந்த கானக் குஞ்சிக் கவடி புல்லினன் முடுகு நாறு குடிலை யாக்கையன் வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் றன்இனத் தலைவன் ஒங்கிய வில்லும் அம்பும் நல்லன ஏந்தி ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கி கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன்தலைச் செருக்கிய தண்பளித் தாமும் வாய்க்கல சத்து மஞ்சன நீரும் கொண்டு கானப் பேருறை கண்ணுதல் முடியிற் பூசை அடியால் நீக்கி நீங்காக் குணத்துக் கோசரிக் கன்றவன் நேசங் காட்ட முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்
தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழு தெழுந் தரற்றிப் புன்மருந் தாற்றப் போகா தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம் பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய்
நல்லை நல்லை எனப்பெறும் திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.
| [1] |
Back to Top
கபிலதேவ நாயனார் மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.020  
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
பண் - ( )
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
| [1] |
Back to Top
கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.021  
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
பண் - ( )
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான் அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின் தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான் வீங்கிருள்சேர் நீல மிடறு.
| [1] |
Back to Top
கபிலதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.022  
சிவபெருமான் திருவந்தாதி
பண் - ( )
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந் தொன்றும் மனிதர் உயிரையுண் டொன்றும் மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த மதியான் இடப்பக்கம் மால்.
| [1] |
Back to Top
பரணதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.023  
சிவபெருமான் திருவந்தாதி
பண் - ( )
ஒன்றுரைப்பீர் போலப் பல உரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவும் பூணும் பிரான்.
| [1] |
Back to Top
இளம்பெருமான் அடிகள் சிவபெருமான் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.024  
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
பண் - ( )
முதல்வன் வகுத்த மதலை மாடத்து இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற் பள்ளிச் செம்புயல் உள்விழு தூறீஇப் புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின் அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை இலங்குவளைத் தனிபோது விரித்த அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.
| [1] |
Back to Top
அதிராவடிகள் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.025  
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
பண் - ( )
ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர் மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக் குடற்புலவு கமழும் அடற்கழுப் படையவன் மதலை மாமதந் துவன்றிய கதனுடைக் கடதடக் கபோலத் தோரிட மருப்பின் கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன் சேவடி யுகளம் அல்லது யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.
| [1] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் கோயில் நான்மணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.026  
கோயில் நான்மணிமாலை
பண் - (கோயில் (சிதம்பரம்) )
பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் பாமேவும் ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை.
| [1] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருக்கழுமல மும்மணிக் கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.027  
திருக்கழுமல மும்மணிக் கோவை
பண் - (சீர்காழி )
திருவளர் பவளப் பெருவரை மணந்த மரகத வல்லி போல ஒருகூ றிமையச் செல்வி பிரியாது விளங்கப் பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த அலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த
வரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக் கதிர்விடு நின்முகங் காண்தொறுங் காண்தொறும் முதிரா இளமுறை முற்றாக் கொழுந்தின் திருமுகத் தாமரை செவ்வியின் மலரநின் தையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை
இளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின் செவ்வாய்க் குமுதஞ் செவ்வி செய்யநின் செங்கைக் கமலம் மங்கை வனமுலை அமிர்த கலசம் அமைவின் ஏந்த மலைமகள் தனாது நயனக் குவளைநின்
பொலிவினொடு மலர மறையோர் கழுமலம் நெறிநின்று பொலிய நாகர் நாடு மீமிசை மிதந்து மீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங் கொன்றா வந்த குன்றா வெள்ளத்
துலகம்மூன் றுக்குங் களைகண் ஆகி முதலில் காலம் இனிதுவீற் றிருந்துழித் தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னா யோவென் றழைப்பமுன் நின்று
ஞான போனகம் அருளட்டிக் குழைத்த ஆனாத் திரளை அவன்வயின் அருள அந்தணன் முனிந்து தந்தார் யார் என அவனைக் காட்டுவன் அப்ப வானார் தோஒ டுயை செவியன் என்றும்
பீஇ டுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே.
| [1] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.028  
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
பண் - (திருவிடைமருதூர் )
தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற் றாது வலம்புரி நெடுமால் ஏன மாகி
நிலம்புக் காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து பத்தி அடியவர் பச்சிலை இடினும் முத்தி கொடுத்து முன்னின் றருளித் திகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர் மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத் தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து நச்செயிற் றரவக் கச்சையாப் புறத்துப் பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி அரத்த ஆடை விரித்துமீ துறீஇ இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங்
கேழற் கோடும் வீழ்திரன் அக்கும் நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம் வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் பொற்றா மரையின் முற்றா முகிழென உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம் அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவுந் தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச் சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் நொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் இரவியும் எரியும் விரவிய வெம்மையின் ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம் நவ்வி மானின் செவ்வித் தாகிப் பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம் நொச்சிப் பூவும் பச்சை மத்தமும் கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும் கங்கை யாறும் பைங்கண் தலையும் அரவும் மதியமும் விரவத் தொடுத்த சூடா மாலை சூடிப் பீடுகெழு நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு நான்முகம் கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணங் கருத்தையுங் கடந்து சேணிகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய கடவுட் கற்பின் மடவரல் மகளிர் கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக் கைவைத்துப் புனைந்த தெய்வமாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத் திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி இனைய வண்ணத்து நினைவருங் காட்சி இருவயின் உருவும் ஒருவயிற்றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க வாணுதல் பாகம் நாணுதல் செய்ய வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங் குலகம் ஏழும் பன்முறை ஈன்று
மருதிடங் கொண்ட ஒருதனிக் கடவுள் நின் திருவடி பரவுதும் யாமே நெடுநாள் இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும் சிறைக்கருப் பாசயம் சேரா மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.
| [1] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருஏகம்பமுடையார் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.029  
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பண் - (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய் கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேயுன்னைப் போற்றுகின்ற இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே.
| [1] |
Back to Top
பட்டினத்துப் பிள்ளையார் திருவொற்றியூர் ஒருபா ஒருபது
11 -ஆம் திருமுறை பதிகம் 11.030  
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
பண் - (திருவொற்றியூர் )
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த ஒற்றி மாநகர் உடையோய் உருவின் பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே
மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே பாவகன் பரிதி பனிமதி தன்னொடும் மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம் தண்ணொளி ஆரம் தாரா கணமே விண்ணவர் முதலா வேறோர் இடமாக்
கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம் எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே அணியுடை அல்குல் அவனிமண் டலமே மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே
வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி வானவர் முதலா மன்னுயிர் பரந்த ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும் சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே
அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும் இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ டொன்றிய துப்புரு இருவகை ஆகி முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி
அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ டேழுல காகி எண்வகை மூர்த்தியோ டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி எவ்வகை அளவினில் கூடிநின்று அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.031  
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
பண் - (திருநாரையூர் )
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான்.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.032  
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
பண் - (கோயில் (சிதம்பரம்) )
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற அஞ்செம் பவளவண் ணா வருட் கியானினி யாரென்பனே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.033  
திருத்தொண்டர் திருவந்தாதி
பண் - ( )
பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்குமந் தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
11 -ஆம் திருமுறை பதிகம் 11.034  
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
பண் - ( )
பார்மண் டலத்தினிற் பன்னிரு பேரொடு மன்னிநின்ற நீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த கார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளான் கருணைபெற்ற தார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.035  
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
பண் - ( )
பாலித் தெழில்தங்கு பாரகம் உய்யப் பறிதலையோர் மாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத் தாலித் தலர்மிசை யன்னம் நடப்ப, வணங்கிதென்னாச் சாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.036  
ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
பண் - ( )
திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங் கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின் இதழியின் மெம்பொ னிருகரை சிதறிப் புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன் திருவருள் பெற்ற இருபிறப் பாளன்
முத்தீ வேள்வு நான்மறை வளர ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன் ஏழிசை யாழை யெண்டிசை யறியத் துண்டப் படுத்த தண்டமிழ் விரகன் காழி நாடன் கவுணியர் தலைவன்
மாழை நோக்கி மலைமகள் புதல்வன் திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந் நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.037  
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பண் - ( )
திருந்திய சீர்ச்செந்தா மரைத் தடத்துச் சென் றோர் இருந் தண் இளமேதி பாயப் பொருந்திய
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
11 -ஆம் திருமுறை பதிகம் 11.038  
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
பண் - ( )
அலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி ஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய் ஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.039  
ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
பண் - ( )
பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக் கோவாக் குதலை சிலம்பரற்ற - ஒவா தழுவான் பசித்தான் என்றாங் கிறைவன் காட்டத் தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன் அருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத் திரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த காழி முதல்வன் கவுணியர்தம் போர்ஏறு ஊழி முதல்வன் உவன் என்று - காட்டவலான் வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான் பாழி அமணைக் கழுவேற்றினான் - பாணர் யாழை முறித்தான் எரிவாய் இடும்பதிகம் ஆழி உலகத் தழியாமற் - காட்டினான். ஏழிசை வித்தகன் வந்தேனோரும் வானோரும் தாழும் சரணச் சதங்கைப் - பருவத்தே பாலையும் நெய்தலும் பாடவலான் சோலைத் திருவா வடுது றையில் செம்பொற் - கிழிஒன் றருளாலே பெற்றருளும் ஐயன் தெருளாத தென்னவன் நாடெல்லாம் திருநீறு - பாலித்த மன்னன் மருகல்விடம் தீர்த்த பிரான் பின்னைத்தென் கோலக்கா வில்தாளம் பெற்றிக் - குவலயத்தில் முத்தின் சிவிகை அரன் கொடுப்ப முன்னின்று தித்தித்த பாடல் செவிக்களித்தான் - நித்திலங்கள் மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப் பாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும் திருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனைஆ கென்னும் பெருவார்த்தை தான் உடைய பிள்ளை - மருவினிய கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப உள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல் மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த குழகன் குலமறையோர் கோமான் - நிலவிய வைகை ஆற் றே டிட்டு வான்நீர் எதிர்ஒட்டும் செய்கையான் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை வாவென் றழைப்பித் திம்மண்ணுலகில் - வாழ்வித்த சீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த புத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் கொச்சைச் சதுரன்தன் கோமானைத் - தான்செய்த பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா வித்துப் பொருளை விளைக்க - வலபெருமான் முத்திப் பகவ முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம - தென்னவலான் கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் - தந்தபிரான் பத்திச் சிவம்என்று பாண்டிமா தேவியொடும் கொற்றக் கதர்வேற் குலச்சிறையும் - கொண்டாடும் அற்றைப் பொழுதத் தமணர்இடும் வெந்தீயைப் பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை - என்னவல்லான் வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன் பத்தியை ஈசன் பதிகத்தே - காட்டினான் அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான் துத்த மொழிக்குதலைத் தூயவாய் - நன்னுதலி கொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் - கைம்மலர்க்கும் அத்தா மரைஅடிக்கும் அம்மென் குறங்கினுக்கும் சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே - ரல்குலுக்கும் முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்கு ஒத்த மணம் இதுஎன் றோதித் - தமர்களெல்லாம் சித்தம் களிப்பத் திருமணம்செய் காவணத்தே அற்றைப் பொழுதத்துக் கண்டுட - னேநிற்க பெற்றவர்க ளோடும் பெருமணம் போய்ப்புக்குத் தன்அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.
| [1] |
Back to Top
நம்பியாண்டார் நம்பி திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
11 -ஆம் திருமுறை பதிகம் 11.040  
திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
பண் - ( )
புலனொ டாடித் திரிமனத்தவர் பொறிசெய் காமத் துரிசடக்கிய புனித நேசத் தொடுதமக்கையர் புணர்வி னால்உற் றுரைசெயக்குடர் சுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர் சுடுவெ ணீறிட் டமண கற்றிய துணிவி னான்முப் புரமெ ரித்தவர் சுழலி லேபட் டிடுத வத்தினர் உலகின் மாயப் பிறவி யைத்தரும் உணர்வி லாவப் பெரும யக்கினை ஒழிய வாய்மைக் கவிதை யிற்பல உபரி யாகப் பொருள்ப ரப்பிய
அலகில் ஞானக் கடலி டைப்படும் அமிர்த யோகச் சிவவொ ளிப்புக அடிய ரேமுக் கருளி னைச்செயும் அரைய தேவத் திருவ டிக்களே.
| [1] |