சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
பண் - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=h8QZrRo4xp4
5.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   நன்று நாள்தொறும் நம் வினை
பண் - திருக்குறுந்தொகை   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.039   அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவேட்களம் ; (திருத்தலம் அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி )
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

[1]
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து, சங்க வெண்தோடு சரிந்து இலங்க,
புடைதனில் பாரிடம் சூழ, போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை, உண்பதும் ஊர் இடு பிச்சை, வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.

[2]
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

[3]
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

[4]
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

[5]
கறி வளர் குன்றம் எடுத்தவன் காதல் கண் கவர் ஐங்கணையோன் உடலம்
பொறி வளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்,
மறி வளர் அம் கையர், மங்கை ஒரு பங்கர், மைஞ்ஞிறமான் உரி தோல் உடை ஆடை
வெறி வளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன்நகராரே.

[6]
மண் பொடிக்கொண்டு எரித்து ஓர் சுடலை, மாமலை வேந்தன் மகள் மகிழ,
நுண் பொடிச் சேர நின்று ஆடி, நொய்யன செய்யல் உகந்தார்,
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்,
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்நகராரே.

[7]
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆர் அமுதம் அமரர்க்கு அருளி,
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்து, சூலமோடு ஒண்மழு ஏந்தி,
தாழ் தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்நகராரே.

[8]
திரு ஒளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும், திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும், கைதொழ நின்றதும் அல்லால்,
அரு வரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெரு உற ஊன்றிய பெம்மான்-வேட்கள நன்நகராரே.

[9]
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

[10]
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.042   நன்று நாள்தொறும் நம் வினை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவேட்களம் ; (திருத்தலம் அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி )
நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்;
என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்;
சென்று, நீர், திரு வேட்களத்துள்(ள்) உறை
துன்று பொன்சடையானைத் தொழுமினே!

[1]
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்;
பொருப்பு வெஞ்சிலையால் புரம் செற்றவன்;
விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
இருப்பன் ஆகில், எனக்கு இடர் இல்லையே.

[2]
வேட்களத்து உறை வேதியன், எம் இறை;
ஆக்கள் ஏறுவர்; ஆன் ஐஞ்சும் ஆடுவர்;
பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
காப்பர் நம்மை, கறைமிடற்று அண்ணலே.

[3]
அல்லல் இல்லை; அருவினைதான் இல்லை-
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்,
செல்வனார், திரு வேட்களம் கைதொழ
வல்லர் ஆகில்; வழி அது காண்மினே!

[4]
துன்பம் இல்லை; துயர் இல்லை; யாம், இனி
நம்பன் ஆகிய நல் மணிகண்டனார்,
என் பொனார், உறை வேட்கள நன்நகர்
இன்பன், சேவடி ஏத்தி இருப்பதே.

[5]
கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல் உயிர் போவதன் முன்னம், நீர்,
சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே.

[6]
வட்ட மென் முலையாள் உமை பங்கனார்,
எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்,
சிட்டர், சேர் திரு வேட்களம் கைதொழுது
இட்டம் ஆகி இரு, மட நெஞ்சமே!

[7]
நட்டம் ஆடிய நம்பனை, நாள்தொறும்
இட்டத்தால் இனிது ஆக நினைமினோ-
வட்டவார் முலையாள் உமை பங்கனார்,
சிட்டனார், திரு வேட்களம் தன்னையே!

[8]
வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
சுட்ட கொள்கையர் ஆயினும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு வேட்களச் செல்வரே.

[9]
சேடனார் உறையும் செழு மாமலை
ஓடி அங்கு எடுத்தான் முடிபத்து இற
வாட ஊன்றி, மலர் அடி வாங்கிய
வேடனார் உறை வேட்களம் சேர்மினே!

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list