|
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 -ஆம் திருமுறை பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருஆலவாய் (மதுரை) )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற
Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!
| [1] |
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?
| [2] |
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!
| [3] |
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்
| [4] |
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே
| [5] |
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?
| [6] |
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!
| [7] |
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!
| [8] |
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!
| [9] |
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!
| [10] |
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!
| [11] |
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!
| [12] |
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி Back to Top
|
|