சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

நலம் தரும் பதிகங்கள் நலம் தரும் பதிகங்கள்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Health & Safety   நோய்கள் நீங்க 1.044   சுரம் , விஷக்கடி 1.116   2.047   உடல் நலம் 4.009   சூட்டு நோய் 2.066   4.011 திக்குவாய்   8.112 நீர் துன்பங்கள்   4.094 விஷ உணவு   4.002 கூன் நிமிற   3.054   Eyes   கண் 7.061   கண் 7.095 Marriage ‌  2.016   2.018   8.117   Child   3.046   2.048   5.069   1.098   8.121   Relationship   3.078   4.082   Financial & Economic Improvements   3.004   3.022   1.092   3.108   7.049   7.087   7.046   7.020   5.001   7.034   7.025   7.090   Rain   7.055   1.054   Education & Arts   1.128   2.031   1.080   1.023   Personal issues   2.085   2.111   1.001   1.049   1.052   2.072   3.006   3.049   3.051   3.073   3.024   4.109   5.003   Navagraha Dhosa   சனி 1.049   கோள்கள் 2.085   ராகு கேது 1.041   கோள்கள் 3.010  

1 1.023 திருஞானசம்பந்த சுவாமிகள் -மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  (திருக்கோலக்கா)   நல்ல தாளம், இசை கை வர
2 1.080 திருஞானசம்பந்த சுவாமிகள் -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  (கோயில் (சிதம்பரம்))   நல்ல இசைக் குழு அமைய
3 1.128 திருஞானசம்பந்த சுவாமிகள் -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   கல்வியில்‌ சிறந்து விளங்க ‌
4 2.031 திருஞானசம்பந்த சுவாமிகள் -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))   கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்  
பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர

Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

[2]
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

[3]
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான்,
குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!

[4]
மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயில் ஆர் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்க, பறையும், பாவமே.

[5]
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,
கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்
அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!

[6]
நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,
குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

[7]
எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை
முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறி ஆர் பண் செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

[8]
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,
கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா
ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!

[9]
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

[10]
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  
பண் - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
நல்ல இசைக் குழு அமைய

Audio: https://sivaya.org/audio/1.080 Katraangu Eriyombi.mp3 Audio: https://www.youtube.com/watch?v=rS7fTpfQ_1w
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

[1]
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
பிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை,
மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.

[2]
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்,
பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்
செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.

[3]
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்
சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

[4]
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

[5]
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய
கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.

[6]
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

[7]
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து,
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

[8]
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்
காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான்,
சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

[9]
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.

[10]
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.128  
ஓர் உரு ஆயினை; மான்  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )

கல்வியில்‌ சிறந்து விளங்க ‌

Audio: https://sivaya.org/audio/1.128 Oor Uru Aayinai.mp3 Audio: https://www.youtube.com/watch?v=rfRTjyK3Eck
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  
பண் - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)

கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

[1]
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.

[2]
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.

[3]
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.

[4]
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

[5]
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.

[6]
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

[7]
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

[8]
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

[9]
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.

[10]
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

[11]
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Tue, 11 Jun 2024 23:29:37 +0000
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

palan tharum paadal nalam education