சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

நலம் தரும் பதிகங்கள்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Health & Safety   நோய்கள் நீங்க 1.044   சுரம் , விஷக்கடி 1.116   2.047   உடல் நலம் 4.009   சூட்டு நோய் 2.066   4.011 திக்குவாய்   8.112 நீர் துன்பங்கள்   4.094 விஷ உணவு   4.002 கூன் நிமிற   3.054   Eyes   கண் 7.061   கண் 7.095 Marriage ‌  2.016   2.018   8.117   Child   3.046   2.048   5.069   1.098   8.121   Relationship   3.078   4.082   Financial & Economic Improvements   3.004   3.022   1.092   3.108   7.049   7.087   7.046   7.020   5.001   7.034   7.025   7.090   Rain   7.055   1.054   Education & Arts   1.128   2.031   1.080   1.023   Personal issues   2.085   2.111   1.001   1.049   1.052   2.072   3.006   3.049   3.051   3.073   3.024   4.109   5.003   Navagraha Dhosa   சனி 1.049   கோள்கள் 2.085   ராகு கேது 1.041   கோள்கள் 3.010  

1 1.098 திருஞானசம்பந்த சுவாமிகள் -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)   சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம்
2 2.048 திருஞானசம்பந்த சுவாமிகள் -கண் காட்டும் நுதலானும், கனல்  (திருவெண்காடு)   மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்
3 3.046 திருஞானசம்பந்த சுவாமிகள் -முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  (திருக்கருகாவூர்)   குழத்தைப் பேறு- கருக்‌ கலையாமல்‌ பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்
4 5.069 திருநாவுக்கரசர் -மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  (திருக்கருவிலிக்கொட்டிட்டை)   சுகப்பிரசவம்‌ இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்
5 8.121 மாணிக்க வாசகர்  -கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்  (கோயில் (சிதம்பரம்))  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,  
பண் - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY Audio: https://sivaya.org/audio/1.098 Nantruudayanai.mp3 Audio: https://sivaya.org/audio/1.098 nandurudaiyanai.mp3
நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[1]
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?

[2]
மந்தம் முழவம் மழலை ததும்ப, வரை நீழல்
செந் தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளி,
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார், விடை ஊரும்
எம்தம் அடிகள், அடியார்க்கு அல்லல் இல்லையே.

[3]
துறை மல்கு சாரல், சுனை மல்கு நீலத்து இடை வைகி,
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளி,
கறை மல்கு கண்டன், கனல் எரி ஆடும் கடவுள், எம்
பிறை மல்கு சென்னி உடையவன், எங்கள் பெருமானே!

[4]
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலை வரை ஆகச் செற்றனரேனும், சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்!
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே?

[5]
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?

[6]
வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்,
பேய் உயர் கொள்ளி கைவிளக்கு ஆக, பெருமானார்,
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று; ஆகாதே!

[7]
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி, மலரோன் தன்
தலை கலன் ஆகப் பலி திரிந்து உண்பர்; பழி ஓரார்
சொல வல வேதம் சொல வல கீதம் சொல்லுங்கால்,
சில அலபோலும், சிராப்பள்ளிச் சேடர் செய்கையே!

[8]
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

[9]
நாணாது உடை நீத்தோர்களும், கஞ்சி நாள்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவோர்கள், உரைக்கும் சொல்
பேணாது, உறு சீர் பெறுதும் என்பீர்! எம்பெருமானார்
சேண் ஆர் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

[10]
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்  
பண் - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

[1]
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;
வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய் வினையார் அவர்தம்மைத் தோயா ஆம், தீவினையே.

[2]
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி, இரவி,
எண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,
பெண்ணினொடு, ஆண், பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்
விண்ணவர்கோள் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.

[3]
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,
மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,
தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.

[4]
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்
மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,
ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.

[5]
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
ஒண்மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓத, பசுங்கிள்ளை
வெண் முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

[6]
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்து அயிராவதம் பணிய,
மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்
முக்குளம், நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே.

[7]
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட, கடல் முழங்க,
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.

[8]
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்
ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும், உணர்வு அரியான்
வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.

[9]
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;
வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!

[10]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  
பண் - கௌசிகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

குழத்தைப் பேறு- கருக்‌ கலையாமல்‌ பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[1]
விமுதல் வல்ல சடையான்-வினை உள்குவார்க்கு
அமுதநீழல் அகலாததோர் செல்வம் ஆம்,
கமுதம் முல்லை கமழ்கின்ற, கருகாவூர்
அமுதர்; வண்ணம் அழலும் அழல்வண்ணமே.

[2]
பழக வல்ல சிறுத்தொண்டர், பா இன் இசைக்
குழகர்! என்று குழையா, அழையா, வரும்,
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[3]
பொடி மெய் பூசி, மலர் கொய்து, புணர்ந்து உடன்,
செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
அடிகள்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[4]
மையல் இன்றி, மலர் கொய்து வணங்கிட,
செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
கைதல், முல்லை, கமழும் கருகாவூர் எம்
ஐயர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[5]
மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட,
ஆசை ஆர, அருள் நல்கிய செல்வத்தர்;
காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
ஈசர்; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.

[6]
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்,
சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்-
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை; வண்ணம்(ம்) எரியும்(ம்) எரிவண்ணமே.

[7]
பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
மண்ணு கோலம்(ம்) உடைய அம்மலரானொடும்
கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
அண்ணல்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[9]
போர்த்த மெய்யினர், போது உழல்வார்கள், சொல்
தீர்த்தம் என்று தெளிவீர்! தெளியேன்மின்!
கார்த் தண்முல்லை கமழும் கருகாவூர் எம்
ஆத்தர் வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[10]
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ
நிலவு பாடல் உடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.069  
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்  
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
இந்த தலம் வீழிமிழலை தலத்திற்கு வடமேற்கில் உள்ள தலம். .பூந்தோட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கும்பகோணத்திலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள தலம்.. தற்போது கருவேலி என்று அழைக்கப்படுகின்றது. தலத்து பெருமானை வழிபடும் அடியார்கள், மறுபடியும் கருப்பையினில் புகாத வண்ணம் இறைவன் காப்பதால் கருவிலி என்ற பெயர் வந்ததாகவும் நாளடைவில் கருவேலி என்று மருவியதாகவும் கூறுவார்கள். தலத்தின் பெயர் கருவிலி; திருக்கோயிலின் பெயர் கொட்டிட்டை; இரண்டையும் இணைத்து கருவிலிக் கொட்டிட்டை என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்று மட்டும், இந்த தலத்திற்கு உரிய தேவாரப் பதிகமாக நமக்கு கிடைத்துள்ளது.
சுகப்பிரசவம்‌ இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=0TIw1JgVkQw
மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர்,
கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!

[1]
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும்
ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர்,
காலனார் வருதல் முன், கருவிலி,
கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[2]
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர்,
மங்குமா நினையாதே, மலர்கொடு,
கங்கை சேர் சடையான்தன் கருவிலி,
கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[3]
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!-
வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்-
காடனார் உறைகின்ற கருவிலி,
கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[4]
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்!
பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக்
கையினான், உறைகின்ற கருவிலி,
கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!

[5]
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர்,
தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி,
காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி,
கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!

[6]
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா ஆறு செயப் புரியாது, நீர்,
கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி,
கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!

[7]
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு
உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர-
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி,
குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!

[8]
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும்
எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ-
கம்பனார் உறைகின்ற கருவிலி,
கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!

[9]
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை
பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்,
கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி,
கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.121  
கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
அறுசீர் விருத்தம்

Audio: https://sivaya.org/thiruvaasagam/21 Koilmutha Thirupathigam Thiruvasagam.mp3
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி;
அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!

[1]
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று,
பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!
என்?' என்று, அருள் இவர நின்று, போந்திடு' என்னாவிடில், அடியார்,
உன் நின்று, இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!

[2]
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன்,
சகம் தான் அறிய முறையிட்டால், தக்க ஆறு அன்று' என்னாரோ?
மகம் தான் செய்து வழி வந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன்
முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம்பலத்து எம் முழு முதலே!

[3]
முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என் தனக்கும்,
வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான், குழுமிக்
கெழு முதலே! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ?' என்று
அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே!

[4]
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே!' என்று உன் அருள் நோக்கி,
இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்;
கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால்,
பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?

[5]
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம்
பேசா நிற்பர்; யான் தானும் பேணா நிற்பேன், நின் அருளே;
தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க,
ஈசா! பொன்னம்பலத்து ஆடும் எந்தாய்! இனித்தான் இரங்காயே!

[6]
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று என்று, ஏமாந்திருப்பேனை,
அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ?
நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும்
மருங்கே சார்ந்து, வர, எங்கள் வாழ்வே, வா' என்று அருளாயே!

[7]
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு?
பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!
மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா' என்று, உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?

[8]
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை
விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து, உன் திருநாமம்
தரிப்பார்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னே
நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!

[9]
நல்காது ஒழியான் நமக்கு' என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி,
பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம்' என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!

[10]
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

palan tharum paadal