சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

நலம் தரும் பதிகங்கள்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Health & Safety   நோய்கள் நீங்க 1.044   சுரம் , விஷக்கடி 1.116   2.047   உடல் நலம் 4.009   சூட்டு நோய் 2.066   4.011 திக்குவாய்   8.112 நீர் துன்பங்கள்   4.094 விஷ உணவு   4.002 கூன் நிமிற   3.054   Eyes   கண் 7.061   கண் 7.095 Marriage ‌  2.016   2.018   8.117   Child   3.046   2.048   5.069   1.098   8.121   Relationship   3.078   4.082   Financial & Economic Improvements   3.004   3.022   1.092   3.108   7.049   7.087   7.046   7.020   5.001   7.034   7.025   7.090   Rain   7.055   1.054   Education & Arts   1.128   2.031   1.080   1.023   Personal issues   2.085   2.111   1.001   1.049   1.052   2.072   3.006   3.049   3.051   3.073   3.024   4.109   5.003   Navagraha Dhosa   சனி 1.049   கோள்கள் 2.085   ராகு கேது 1.041   கோள்கள் 3.010  

1 1.044 திருஞானசம்பந்த சுவாமிகள் -துணி வளர் திங்கள் துளங்கி  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))   இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்
2 1.116 திருஞானசம்பந்த சுவாமிகள் -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)   விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம்
3 2.018 திருஞானசம்பந்த சுவாமிகள் -சடையாய்! எனுமால்; சரண் நீ!  (திருமருகல்)   திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.
4 2.047 திருஞானசம்பந்த சுவாமிகள் -மட்டு இட்ட புன்னை அம்கானல்  (திருமயிலை (மயிலாப்பூர்))   பலவகை உடற்பிணிகள்‌ அகல ஓத வேண்டிய பதிகம்‌
5 3.054 திருஞானசம்பந்த சுவாமிகள் -வாழ்க அந்தணர், வானவர், ஆன்  (திருஆலவாய் (மதுரை))   கூன் நிமிற
6 4.009 திருநாவுக்கரசர் -தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  (பொது - திருஅங்கமாலை)   உடல் உறுப்புகள் நலம் பெற ஓத வேண்டிய பதிகம்
7 7.061 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -ஆலம் தான் உகந்து அமுது  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))   கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு
8 7.095 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -மீளா அடிமை உமக்கே ஆள்  (திருவாரூர்)   இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்
9 8.112 மாணிக்க வாசகர்  -திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  (கோயில் (சிதம்பரம்))   திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்
10 8.117 மாணிக்க வாசகர்  -அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்  (கோயில் (சிதம்பரம்))  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி  
பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[1]
கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[2]
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?

[3]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
வனமலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[4]
மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு பூதத்தார் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

[5]
நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

[6]
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

[7]
ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?

[8]
மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?

[9]
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையால் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?

[10]
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.116  
அவ் வினைக்கு இவ் வினை  
பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனி மனத்தால்,
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று, இருபொழுதும்,
பூவினைக் கொய்து, மலர் அடி போற்றுதும், நாம் அடியோம்;
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[2]
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்,
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்!
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[3]
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்,
புண்ணியர் என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா; திரு நீலகண்டம்!

[4]
மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொல்-துணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்;
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[5]
மறக்கும் மனத்தினை மாற்றி, எம் ஆவியை வற்புறுத்தி,
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர் கொடுவந்து, உமை ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[6]
கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை கடிந்து, உம் கழல் அடிக்கே
உருகி, மலர் கொடுவந்து, உமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திரு இலித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[7]
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும், தொழுது வணங்குதும், நாம் அடியோம்;
சீற்றம் அது ஆம் வினை தீண்டப் பெறா; திரு நீலகண்டம்!

[8]
சாக்கியப்பட்டும், சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்,
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[9]
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்,
இறந்த பிறவி உண்டாகில், இமையவர்கோன் அடிக்கண்
திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!  
பண் - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம்.

Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
சிந்தாய்! எனுமால்; சிவனே! எனுமால்;
முந்தாய்! எனுமால்; முதல்வா! எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?

[2]
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?

[3]
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?

[4]
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?

[5]
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே

[6]
வழுவாள்; பெருமான்கழல் வாழ்க! எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?

[7]
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?

[8]
எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?

[9]
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?

[10]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்  
பண் - சீகாமரம்   (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
பலவகை உடற்பிணிகள்‌ அகல ஓத வேண்டிய பதிகம்‌

Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3
மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[1]
மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பயந்த நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[2]
வளைக்கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல்கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!

[3]
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[4]
மைப் பூசும் ஒண்கண் மடநல்லார் மா மயிலைக்
கைப் பூசு நீற்றான், கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப் பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[5]
மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடல் ஆட்டுக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள், அடி பரவி,
நடம் ஆடல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[6]
மலி விழா வீதி மடநல்லார் மா மயிலைக்
கலி விழாக் கண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்
பலி விழாப் பாடல்செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[7]
தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான்,
கண் ஆர் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பண் ஆர் பதினெண்கணங்கள் தம்(ம்) அட்டமி நாள்
கண் ஆரக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[8]
நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும்
முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி, திருவடியைக்
கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் அமர்ந்தான்,
பொன் தாப்புக் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[9]
உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண், உடையைப் போர்க்கும்
இருஞ் சாக்கியர்கள், எடுத்து உரைப்ப, நாட்டில்
கருஞ் சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ் சாந்தி காணாதே போதியோ? பூம்பாவாய்!

[10]
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற

Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

[1]
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?

[2]
வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ!

[3]
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார்

[4]
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே

[5]
ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே?

[6]
கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே!

[7]
வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே!

[8]
பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே!

[9]
மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே!

[10]
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!

[11]
நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு  
பண் - சாதாரி   (பொது - திருஅங்கமாலை )

உடல் உறுப்புகள் நலம் பெற ஓத வேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!

[1]
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!

[2]
செவிகாள், கேண்மின்களோ!-சிவன், எம் இறை, செம்பவள
எரி போல், மேனிப் பிரான், திறம் எப்போதும், செவிகாள், கேண்மின்களோ!

[3]
மூக்கே, நீ முரலாய்!-முதுகாடு உறை முக்கண்ணனை,
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை,-மூக்கே, நீ முரலாய்!

[4]
வாயே, வாழ்த்துக் கண்டாய்!-மதயானை உரி போர்த்து,
பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை- வாயே, வாழ்த்து கண்டாய்!

[5]
நெஞ்சே, நீ நினையாய்!-நிமிர் புன் சடை நின் மலனை,
மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை,-நெஞ்சே, நீ நினையாய்!

[6]
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!

[7]
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து.
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?

[8]
கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

[9]
உற்றார் ஆர் உளரோ?-உயிர் கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு உற்றார் ஆர் உளரோ?

[10]
இறுமாந்து இருப்பன் கொலோ?-ஈசன் பல் கணத்து எண்ணப் பட்டு,
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று, அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ?

[11]
தேடிக் கண்டு கொண்டேன்!-திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை, என் உள்ளே, தேடிக் கண்டு கொண்டேன்!

[12]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.061  
ஆலம் தான் உகந்து அமுது  
பண் - தக்கேசி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார்.
கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு

Audio: https://www.youtube.com/watch?v=w8tRfonamJU
ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[1]
உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[2]
திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை,
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை,
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[3]
குண்டலம் திகழ் காது உடையானை, கூற்று உதைத்த கொடுந்தொழிலானை,
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையினானை, வாள் அரா மதி சேர் சடையானை,
கெண்டை அம் தடங்கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[4]
வெல்லும் வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம் வல்லானை,
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்று ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[5]
திங்கள் தங்கிய சடை உடையானை, தேவதேவனை, செழுங் கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடையானை, சாம வேதம் பெரிது உகப்பானை,
மங்கை நங்கை மலை மகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[6]
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான் விரித்து ஓத வல்லானை,
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை, நாளும் நாம் உகக்கின்ற பிரானை,
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[7]
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில்-திகழும் சிவன் தன்னை,
பந்தித்த(வ்) வினைப்பற்று அறுப்பானை, பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை,
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[8]
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர் தம் வாலிய(ப்) புரம் மூன்று எரித்தானை,
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி நிரந்தரம் செய்த நிர்க்கண்டகனை,
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[9]
எள்கல் இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

[10]
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை, காணக் கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன்
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.095  
மீளா அடிமை உமக்கே ஆள்  
பண் - செந்துருத்தி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும்

Audio: https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc
மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

[1]
விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!

[2]
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!

[3]
துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!

[4]
செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, எம்பெருமான்! முறையோ? என்றால், வாழ்ந்துபோதீரே!

[5]
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!

[6]
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!

[7]
கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!

[8]
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

[9]
செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!

[10]
கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு  
பண் - பூவேறு கோனும் புரந்தரனும்   (கோயில் (சிதம்பரம்) )
தரவுகொச்சகக் கலிப்பா
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்

Audio: https://sivaya.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
பூசுவதும் வெள் நீறு, பூண்பதுவும் பொங்கு அரவம்,
பேசுவதும் திருவாயால் மறை போலும்? காண், ஏடீ!
பூசுவதும், பேசுவதும், பூண்பதுவும், கொண்டு என்னை?
ஈசன் அவன் எவ் உயிர்க்கும் இயல்பு ஆனான்; சாழலோ!

[1]
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தான் ஈசன்;
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும்அது என்? ஏடீ!
மன்னு கலை, துன்னு பொருள் மறை நான்கே, வான் சரடா,
தன்னையே கோவணமா, சாத்தினன், காண்; சாழலோ!

[2]
கோயில் சுடுகாடு, கொல் புலித் தோல் நல் ஆடை,
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன் காண்; ஏடீ!
தாயும் இலி, தந்தை இலி, தான் தனியன்; ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும் கல் பொடி, காண்; சாழலோ!

[3]
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை,
வயனங்கள் மாயா வடுச் செய்தான்; காண், ஏடீ!
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்,
சயம் அன்றோ வானவர்க்கு, தாழ் குழலாய்? சாழலோ!

[4]
தக்கனையும், எச்சனையும், தலை அறுத்து, தேவர் கணம்
தொக்கென வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்? ஏடீ!
தொக்கென வந்தவர் தம்மைத் தொலைத்தருளி அருள் கொடுத்து, அங்கு
எச்சனுக்கு மிகைத் தலை மற்று அருளினன், காண்; சாழலோ!

[5]
அலரவனும், மாலவனும், அறியாமே, அழல் உரு ஆய்,
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றதுதான் என்? ஏடீ!
நிலம் முதல், கீழ் அண்டம் உற, நின்றிலனேல் இருவரும் தம்
சலம் முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ!

[6]
மலை மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலம் முகத்தால் அவன் சடையில் பாயும் அது என் ஏடீ
சலம் முகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

[7]
கோலாலம் ஆகிக் குரை கடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர் தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ!

[8]
தென் பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான்; பெரும் பித்தன், காண்; ஏடீ!
பெண் பால் உகந்திலனேல், பேதாய்! இரு நிலத்தோர்
விண் பால் யோகு எய்தி, வீடுவர், காண்; சாழலோ!

[9]
தான் அந்தம் இல்லான், தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்தான், காண்; ஏடீ!
ஆனந்த வெள்ளத்து அழுந்துவித்த திருவடிகள்,
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள், காண்; சாழலோ!

[10]
நங்காய்! இது என்ன தவம்? நரம்போடு, எலும்பு, அணிந்து,
கங்காளம் தோள்மேலே காதலித்தான், காண்; ஏடீ!
கங்காளம் ஆமா கேள்; கால அந்தரத்து இருவர்
தம் காலம் செய்யத் தரித்தனன், காண்; சாழலோ!

[11]
கான் ஆர் புலித் தோல் உடை; தலை ஊண்; காடு பதி;
ஆனால், அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர்? ஏடீ!
ஆனாலும், கேளாய்; அயனும் திருமாலும்,
வான் நாடர் கோவும், வழி அடியார்; சாழலோ!

[12]
மலை அரையன் பொன் பாவை, வாள் நுதலாள், பெண் திருவை
உலகு அறிய, தீ வேட்டான் என்னும்அது என்? ஏடீ
உலகு அறிய, தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்,
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும், காண்; சாழலோ!

[13]
தேன் புக்க தண் பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்,
தான் புக்கு நட்டம் பயிலும்அது என்? ஏடீ!
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணி எல்லாம்,
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம், காண்; சாழலோ!

[14]
கட கரியும், பரி மாவும், தேரும், உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறிய ஆறு, எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந் நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால், காண்; சாழலோ!

[15]
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், காண்; ஏடீ!
அன்று, ஆலின் கீழ் இருந்து, அங்கு, அறம் உரைத்தான், ஆயிடினும்,
கொன்றான், காண், புரம் மூன்றும் கூட்டோடே; சாழலோ!

[16]
அம்பலத்தே கூத்து ஆடி, அமுது செய்யப் பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்அது என்? ஏடீ!
நம்பனையும் ஆமா கேள்; நான்மறைகள் தாம் அறியா,
எம்பெருமான், ஈசா' என்று ஏத்தின, காண்; சாழலோ!

[17]
சலம் உடைய சலந்தரன் தன் உடல் தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று, அருளிய ஆறு என்? ஏடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம் இடந்து, அரன் அடிக்கீழ்
அலர் ஆக இட, ஆழி அருளினன், காண்; சாழலோ!

[18]
அம்பரம் ஆம், புள்ளித் தோல்; ஆலாலம், ஆர் அமுதம்;
எம்பெருமான் உண்ட சதிர், எனக்கு அறிய இயம்புல் ஏடீ!
எம்பெருமான் ஏது உடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்,
தம் பெருமை தான் அறியாத் தன்மையன், காண்; சாழலோ!

[19]
அரும் தவருக்கு, ஆலின் கீழ், அறம் முதலா நான்கினையும்
இருந்து, அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு; ஏடீ!
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்,
திருந்த, அவருக்கு, உலகு இயற்கை தெரியா, காண்; சாழலோ!

[20]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.117  
அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்  
பண் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி   (கோயில் (சிதம்பரம்) )
கலிவிருத்தம்

Audio: https://sivaya.org/thiruvaasagam/17 Annaipatthu Thiruvasagam.mp3
வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர்,
நாதப் பறையினர்; அன்னே! என்னும்,
நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும்,
நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.

[1]
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.

[2]
நித்த மணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும்.
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.

[3]
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.

[4]
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும்.
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.

[5]
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும்.
மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்;
என்ன அதிசயம்! அன்னே! என்னும்.

[6]
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

[7]
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

[8]
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால்; அன்னே! என்னும்.
ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்
நையும்; இது என்னே! அன்னே! என்னும்.

[9]
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.

[10]
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

palan tharum paadal