சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

நலம் தரும் பதிகங்கள்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Health & Safety   நோய்கள் நீங்க 1.044   சுரம் , விஷக்கடி 1.116   2.047   உடல் நலம் 4.009   சூட்டு நோய் 2.066   4.011 திக்குவாய்   8.112 நீர் துன்பங்கள்   4.094 விஷ உணவு   4.002 கூன் நிமிற   3.054   Eyes   கண் 7.061   கண் 7.095 Marriage ‌  2.016   2.018   8.117   Child   3.046   2.048   5.069   1.098   8.121   Relationship   3.078   4.082   Financial & Economic Improvements   3.004   3.022   1.092   3.108   7.049   7.087   7.046   7.020   5.001   7.034   7.025   7.090   Rain   7.055   1.054   Education & Arts   1.128   2.031   1.080   1.023   Personal issues   2.085   2.111   1.001   1.049   1.052   2.072   3.006   3.049   3.051   3.073   3.024   4.109   5.003   Navagraha Dhosa   சனி 1.049   கோள்கள் 2.085   ராகு கேது 1.041   கோள்கள் 3.010  

1 1.092 திருஞானசம்பந்த சுவாமிகள் -வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  (திருவீழிமிழலை)   இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்
2 3.004 திருஞானசம்பந்த சுவாமிகள் -இடரினும், தளரினும், எனது உறு  (திருவாவடுதுறை)   பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்
3 3.022 திருஞானசம்பந்த சுவாமிகள் -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  (சீர்காழி)   ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம்
4 3.108 திருஞானசம்பந்த சுவாமிகள் -வேத வேள்வியை நிந்தனை செய்து  (திருஆலவாய் (மதுரை))   வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்
5 5.001 திருநாவுக்கரசர் -அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  (கோயில் (சிதம்பரம்))   சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.
6 7.020 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -நீள நினைந்து அடியேன் உமை  (திருக்கோளிலி (திருக்குவளை))   பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க
7 7.025 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))   கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்‌
8 7.034 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  (திருப்புகலூர்)   உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்
9 7.046 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -பத்து ஊர் புக்கு, இரந்து,  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))   நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க
10 7.049 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,  (திருமுருகன்பூண்டி)   களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க
11 7.087 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்  (திருப்பனையூர்)   நிறைய பண வரவு பொன் கிடைக்க
12 7.090 சுந்தரமூர்த்தி சுவாமிகள் -மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,  (கோயில் (சிதம்பரம்))   ஒரு ஊரில் அல்லது நாட்டில் உல்ல செல்வம் அடுத்த நாட்டில் கிடைக்க, செல்வத்தை ஒர் இடத்தி இருந்து பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு போக

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு  
பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும்

Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE Audio: https://sivaya.org/audio/1.092 Vaasi Theerave.mp3
வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

[2]
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

[3]
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்!
கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!

[4]
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்!
நாம மிழலையீர்! சேமம் நல்குமே!

[5]
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்!
அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!

[6]
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்!
கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!

[7]
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

[8]
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!
இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!

[9]
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்;
வெறி கொள் மிழலையீர்! பிறிவு அது அரியதே.

[10]
காழி மா நகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.004  
இடரினும், தளரினும், எனது உறு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=HR13vYitroI Audio: https://sivaya.org/audio/3.004 idarinum thalarinum.mp3
இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[1]
வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[2]
நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்த,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[3]
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[4]
கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[5]
வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[6]
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[7]
பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[8]
உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;
கண்ணனும், கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[9]
பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[10]
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு  
பண் - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=Pi5cJXxeoVQ
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

[1]
மந்திர நால்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே.

[2]
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர்
ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து
ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

[3]
நல்லவர் தீயவர் எனாது, நச்சினர்
செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே.

[4]
கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்;
தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை
அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே.

[5]
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்,
அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே.

[6]
வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர்
பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும்
மாடு கொடுப்பன; மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே.

[7]
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

[8]
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும்,
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே.

[9]
புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின;
வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.

[10]
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து  
பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=JEAsR66LDzw
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[1]
வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம்(ம்) உடைக் கார் அமண் தேரரை
எய்தி, வாதுசெயத் திரு உள்ளமே?
மை திகழ்தரு மா மணிகண்டனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[2]
மறை வழக்கம் இலாத மா பாவிகள்
பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களை
முறிய, வாதுசெயத் திரு உள்ளமே?
மறி உலாம் கையில் மா மழுவாளனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[3]
அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்து வாழ் அமண்கையர்கள் தம்மொடும்
செறுத்து, வாதுசெயத் திரு உள்ளமே?
முறித்த வான் மதிக்கண்ணி முதல்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[4]
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[5]
வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டு அமண்குண்டரை
ஓட்டி, வாதுசெயத் திரு உள்ளமே?
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[6]
அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்
விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
கழல், வாதுசெயத் திரு உள்ளமே?
தழல் இலங்கு திரு உருச் சைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[7]
நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி, வாதுசெயத் திரு உள்ளமே?
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[8]
நீல மேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
கோலம் மேனி அது ஆகிய குன்றமே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[9]
அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[10]
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்  
பண் - பழந்தக்கராகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல்.

Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே

[1]
அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்,
சுரும்பு அற்றப் படத் தூவி, தொழுமினோ-
கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்,
பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!

[2]
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம்,
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

[3]
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே.

[4]
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.

[5]
சிட்டர், வானவர், சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான், செறு காலனே.

[6]
ஒருத்தனார், உலகங்கட்கு ஒரு சுடர்,
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்,
விருத்தனார், இளையார், விடம் உண்ட எம்
அருத்தனார், அடியாரை அறிவரே.

[7]
விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள்-நிறைந்து நின்று ஆடும், ஒருவனே.

[8]
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.

[9]
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும், திரிந்தும், காண வல்லரோ-
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து-
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?

[10]
மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்,
சதுரன், சிற்றம்பலவன், திருமலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.020  
நீள நினைந்து அடியேன் உமை  
பண் - நட்டராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க

Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே! .

[1]
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்!
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

[2]
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர் நல்லார் வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டித்தரப் பணியே! .

[3]
சொல்லுவது என், உனை நான்? தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ?
கொல்லை வளம் புறவில்-குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

[4]
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

[5]
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே! .

[6]
எம்பெருமான்! நுனையே நினைந்து ஏத்துவன், எப்பொழுதும்;
வம்பு அமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அன்பு அது(வ்) ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

[7]
அரக்கன் முடி கரங்கள்(ள்) அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்!
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்;
குரக்கு இனங்கள் குதி கொள் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
இரக்கம் அது ஆய் அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே! .

[8]
பண்டைய மால், பிரமன், பறந்தும்(ம்) இடந்தும்(ம்) அயர்ந்தும்
கண்டிலராய், அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

[9]
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி(ந்) நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்,
அல்லல் களைந்து உலகின்(ன்), அண்டர் வான் உலகு ஆள்பவரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை  
பண் - நட்டராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்‌

Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
முன் செய்த மூ எயிலும்(ம்) எரித்தீர்; முதுகுன்று அமர்ந்தீர்;
மின் செய்த நுண் இடையாள் பரவை இவள் தன் முகப்பே,
என் செய்த ஆறு, அடிகேள்! அடியேன் இட்டளம் கெடவே?.

[1]
உம்பரும் வானவரும்(ம்) உடனே நிற்கவே, எனக்குச்
செம்பொனைத் தந்து அருளி, திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்;
எம்பெருமான்! அருளீர், அடியேன் இட்டளம் கெடவே! .

[2]
பத்தா! பத்தர்களுக்கு அருள் செய்யும் பரம்பரனே!
முத்தா! முக்கணனே! முதுகுன்றம் அமர்ந்தவனே!
மைத்து ஆரும் தடங்கண் பரவை இவள் வாடாமே,
அத்தா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[3]
மங்கை ஓர் கூறு அமர்ந்தீர்; மறை நான்கும் விரித்து உகந்தீர்;
திங்கள் சடைக்கு அணிந்தீர்; திகழும் முதுகுன்று அமர்ந்தீர்;
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே,
அங்கணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[4]
மை ஆரும் மிடற்றாய்! மருவார் புரம் மூன்று எரித்த
செய்யார் மேனியனே! திகழும் முதுகுன்று அமர்ந்தாய்!
பை ஆரும்(ம்) அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்;
ஐயா! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[5]
நெடியான், நான்முகனும்(ம்), இரவி(ய்)யொடும், இந்திரனும்,
முடியால் வந்து இறைஞ்ச(ம்) முதுகுன்றம் அமர்ந்தவனே!
படி ஆரும்(ம்) இயலாள் பரவை இவள் தன் முகப்பே,
அடிகேள்! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[6]
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல்
வந்து அணவும் மதி சேர், சடை மா முதுகுன்று உடையாய்!
பந்து அணவும் விரலாள் பரவை இவள் தன் முகப்பே,
அந்தணனே! அருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[7]
பரசு ஆரும் கரவா! பதினெண் கணமும் சூழ
முரசார் வந்து அதிர(ம்), முதுகுன்றம் அமர்ந்தவனே!
விரை சேரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே,
அரசே! தந்தருளாய், அடியேன் இட்டளம் கெடவே! .

[8]
ஏத்தாது இருந்து அறியேன்; இமையோர் தனி நாயகனே!
மூத்தாய், உலகுக்கு எல்லாம்; முதுகுன்றம் அமர்ந்தவனே!
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே,
கூத்தா! தந்து அருளாய், கொடியேன் இட்டளம் கெடவே! .

[9]
பிறை ஆரும் சடை எம்பெருமான்! அருளாய் என்று,
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை
மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன்-சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம், சிவலோகம் அதே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்  
பண் - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[1]
மிடுக்கு இலாதானை, வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்; என்று,
கொடுக்கிலாதானை, பாரியே! என்று, கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[2]
காணியேல் பெரிது உடையனே! கற்று நல்லனே! சுற்றம், நல் கிளை,
பேணியே விருந்து ஓம்புமே! என்று பேசினும் கொடுப்பார் இலை;
பூணி பூண்டு உழப் புள் சிலம்பும் தண் புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆணி ஆய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[3]
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இக் கிழவனை,
வரைகள் போல்-திரள் தோளனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புரை வெள் ஏறு உடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அரையனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[4]
வஞ்சம் நெஞ்சனை, மா சழக்கனை, பாவியை, வழக்கு இ(ல்)லியை,
பஞ்சதுட்டனை, சாதுவே! என்று பாடினும் கொடுப்பார் இலை;
பொன் செய் செஞ்சடைப் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சு போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[5]
நலம் இலாதானை, நல்லனே! என்று, நரைத்த மாந்தரை, இளையனே!
குலம் இலாதானை, குலவனே! என்று, கூறினும் கொடுப்பார் இலை;
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அலமரது அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[6]
நோயனை, தடந்தோளனே! என்று, நொய்ய மாந்தரை, விழுமிய
தாய் அன்றோ, புலவோர்க்கு எலாம்! என்று, சாற்றினும் கொடுப்பார் இலை;
போய் உழன்று கண் குழியாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!
ஆயம் இன்றிப் போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[7]
எள் விழுந்த இடம் பார்க்கும் ஆகிலும், ஈக்கும் ஈகிலன் ஆகிலும்,
வள்ளலே! எங்கள் மைந்தனே! என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை;
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[8]
கற்றிலாதானை, கற்று நல்லனே!, காமதேவனை ஒக்குமே ,
முற்றிலாதானை, முற்றனே!, என்று மொழியினும் கொடுப்பார் இலை;
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அத்தனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[9]
தையலாருக்கு ஒர் காமனே! என்றும், சால நல அழகு உடை ஐயனே!
கை உலாவிய வேலனே! என்று, கழறினும் கொடுப்பார் இலை;
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
ஐயனாய் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[10]
செறுவினில் செழுங் கமலம் ஓங்கு தென்புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவலூரன்-வனப்பகை அப்பன், சடையன்தன்
சிறுவன், வன்தொண்டன், ஊரன்-பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க

Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[1]
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி  புக்கு அங்கு இருந்தீர்;
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல    காலும் உழன்றேன்;
சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர்   நீரே;
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[2]
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு,  எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி   வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை   பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி      இருந்தீரே! .

[3]
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை   உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம்    எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[4]
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,| வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்;
தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் | சுந்தரனே! கந்தம் முதல் ஆடை  ஆபரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்;| பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக்
கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!

[5]
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் | இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம்| பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட | உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[6]
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை  தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[7]
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்;| வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு;
ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்;| அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம்   அதனில்-
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்;| தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல்   ஒட்டேன்;
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .

[8]
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை,   சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ?      இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்;   நாளை,
கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம்     மேவி இருந்தீரே! .

[9]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை   உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து     அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[10]
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை   உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண்     பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!   என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார்    அமருலகு ஆள்பவரே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.049  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,  
பண் - பழம்பஞ்சுரம்   (திருமுருகன்பூண்டி ஆவுடைநாயகர் ஆவுடைநாயகியம்மை)
சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, எற்றுக்கு இங்கிருந் தீர் என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.
களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க

Audio: https://www.youtube.com/watch?v=NwyJyYjDJkg
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர், விரவலாமை சொல்லி,
திடுகு மொட்டு எனக் குத்தி, கூறை கொண்டு, ஆறு அலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இடுகு நுண் இடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[1]
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம்
முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[2]
பசுக்களே கொன்று தின்று, பாவிகள், பாவம் ஒன்று அறியார்,
உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம்
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இசுக்கு அழியப் பயிக்கம் கொண்டு, நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[3]
பீறல் கூறை உடுத்து, ஓர் பத்திரம் கட்டி, வெட்டனராய்,
சூறைப் பங்கியர் ஆகி, நாள்தொறும் கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
ஏறு கால் இற்றது இல்லை ஆய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[4]
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாம வேதம் ஓதீ!
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்;
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன் பூண்டி நகர்வாய்,
இயங்கவும் மிடுக்கு உடையராய் விடில், எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[5]
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம்,
கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்;
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[6]
வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று, அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்;
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மா நகர்வாய்,
ஏது காரணம் ஏது காவல் கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[7]
பட அரவு நுண் ஏர் இடை, பணைத்தோள், வரி நெடுங்கண்
மடவரல்(ல்) உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்;
முடவர் அல்லீர்; இடர் இலீர்; முருகன் பூண்டி மா நகர்வாய்;
இடவம் ஏறியும் போவது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

[8]
சாந்தம் ஆக வெண் நீறு பூசி, வெண்பல்-தலை கலனா,
வேய்ந்த வெண் பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்;
மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய்,
ஏந்து பூண் முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே.

[9]
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப்
பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.087  
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம்  
பண் - சீகாமரம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)
புகலூர்ப் பெருமானளித்த பொற் கட்டிகளை யெடுத்துக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருப்பனையூரின் புறத்தே வரும்போது அத்தலத்திறைவன் நம்பியாரூரர்க்கு ஆடல்காட்டி அருள்செய்தார். ஆடல் கண்டருளிய சுந்தரர், மாட மாளிகை எனறு திருப்பதிகம் பாடிப் போற்றித் தொழுதார்.
நிறைய பண வரவு பொன் கிடைக்க

Audio: https://www.youtube.com/watch?v=L0HnSKSQwqk
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர்,
தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.

[1]
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு,
சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர்,
நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று,
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.

[2]
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு
பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர்,
திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.

[3]
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர்,
தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை
ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.

[4]
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர,
பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர்,
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு
அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.

[5]
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப்
பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர்,
மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்;
ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.

[6]
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர்,
துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று,
அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.

[7]
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல்,
பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர்,
வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ-
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.

[8]
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர,
பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர்,
இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.

[9]
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில்,
பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர்,
வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.090  
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே,  
பண் - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
திருமுதுகுன்றத்தில் வழங்கிய பொன்னை, திருவாரூரில் தரும் படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. மாற்றறிதற்கு மச்சம் வெட்டி வைத்துக் கொண்டு பொன்னனைத்தையும் மணிமுத்தாற்றில் புகவிட்டு, அன்று என்னை வலிய ஆட்கொண்ட திருவருளை இதிலறிவேன் என்று கூறித் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கடம்பூரைத் தரிசித்துத் தில்லையம்பதியை அடைந்தார். தில்லைத் திருவீதியை வலம் வந்து கோபுரத்தை வணங்கிக் கோயிலினுட் சென்று பொன்னம்பலவனைத் தொழுதார். மாறிலா மகிழ்ச்சியில் திளைத்தவராய் மடித்தாடும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
ஒரு ஊரில் அல்லது நாட்டில் உல்ல செல்வம் அடுத்த நாட்டில் கிடைக்க, செல்வத்தை ஒர் இடத்தி இருந்து பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு போக

Audio: https://www.youtube.com/watch?v=oW7MPaskWVM
மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும்
தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்;
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும்
பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[1]
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி,
சீர் ஆர்ந்த அன்பராய், சென்று, முன் அடி வீழும் திருவினாரை,
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்,
பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[2]
நரியார் தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து, நாளும் உள்கி,
பிரியாத அன்பராய், சென்று, முன் அடி வீழும் சிந்தையாரை,
தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்,
பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[3]
கருமை ஆர் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை;
அருமை ஆம் தன் உலகம் தருவானை; மண்ணுலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும்,
பெருமை ஆர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[4]
கருமானின் உரி ஆடை, செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை,-
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்
தருவானை, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்,
பெருமானார்,-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[5]
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே! ஒழிகண்டாய், ஊன் கண் ஓட்டம்!
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண்; நெஞ்சமே! நம்மை நாளும்-
பைத்து ஆடும் அரவினன், படர்சடையன், பரஞ்சோதி,-பாவம் தீர்க்கும்
பித்தாடி, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[6]
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்-
பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை, மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்-
தொட்டானை, புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[7]
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு,
எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண்; உள்ளமே! நம்மை நாளும்-
செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது-தடுத்து ஆட்கொள்வான்,
பெற்றேறி,(ப்) புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[8]
நாடு உடைய நாதன் பால் நன்று என்றும் செய், மனமே! நம்மை நாளும்,
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்;
மோடு உடைய சமணர்க்கும், முடை உடைய சாக்கியர்க்கும், மூடம் வைத்த,
பீடு உடைய-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

[9]
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன்; பைங்கண் ஏற்றன்;
ஊர் ஊரன்; தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்;
ஆரூரன் தம்பிரான்; ஆரூரன்; மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே!

[10]
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

palan tharum paadal