சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

நலம் தரும் பதிகங்கள்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Health & Safety   நோய்கள் நீங்க 1.044   சுரம் , விஷக்கடி 1.116   2.047   உடல் நலம் 4.009   சூட்டு நோய் 2.066   4.011 திக்குவாய்   8.112 நீர் துன்பங்கள்   4.094 விஷ உணவு   4.002 கூன் நிமிற   3.054   Eyes   கண் 7.061   கண் 7.095 Marriage ‌  2.016   2.018   8.117   Child   3.046   2.048   5.069   1.098   8.121   Relationship   3.078   4.082   Financial & Economic Improvements   3.004   3.022   1.092   3.108   7.049   7.087   7.046   7.020   5.001   7.034   7.025   7.090   Rain   7.055   1.054   Education & Arts   1.128   2.031   1.080   1.023   Personal issues   2.085   2.111   1.001   1.049   1.052   2.072   3.006   3.049   3.051   3.073   3.024   4.109   5.003   Navagraha Dhosa   சனி 1.049   கோள்கள் 2.085   ராகு கேது 1.041   கோள்கள் 3.010  

1 1.001 திருஞானசம்பந்த சுவாமிகள் -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற
2 1.049 திருஞானசம்பந்த சுவாமிகள் -போகம் ஆர்த்த பூண் முலையாள்  (திருநள்ளாறு)   பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம்‌ - சனிக்கிரக தாக்குதல்‌ நீங்க ஓத வேண்டிய பதிகம்
3 1.052 திருஞானசம்பந்த சுவாமிகள் -மறை உடையாய்! தோல் உடையாய்!  (திருநெடுங்களம்)   அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.
4 2.072 திருஞானசம்பந்த சுவாமிகள் -பந்து ஆர் விரல் மடவாள்  (திருநணா (பவானி))   வினை நீக்கம்‌ - கேட்பவர்‌ வினை நீங்க ஓத வேண்டிய பதிகம்‌
5 2.085 திருஞானசம்பந்த சுவாமிகள் -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
6 2.111 திருஞானசம்பந்த சுவாமிகள் -தளிர் இள வளர் என  (திருவாய்மூர்)   நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக
7 3.006 திருஞானசம்பந்த சுவாமிகள் -கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய  (திருக்கொள்ளம்பூதூர்)   வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற
8 3.024 திருஞானசம்பந்த சுவாமிகள் -மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  (திருக்கழுமலம் (சீர்காழி))   திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்
9 3.049 திருஞானசம்பந்த சுவாமிகள் -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)   நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க
10 3.051 திருஞானசம்பந்த சுவாமிகள் -செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!  (திருஆலவாய் (மதுரை))   பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம்
11 3.073 திருஞானசம்பந்த சுவாமிகள் -பாடல் மறை, சூடல் மதி,  (திருப்பட்டீச்சரம்)   திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்க
12 4.109 திருநாவுக்கரசர் -பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  (திருத்தூங்கானைமாடம்)   கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
13 5.003 திருநாவுக்கரசர் -கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  (திருநெல்வாயில் அரத்துறை)   கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001  
தோடு உடைய செவியன், விடை  
பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற

Audio: https://www.youtube.com/watch?v=Yq-NOZQxd64
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,
பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[2]
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[3]
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்
பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[4]
ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும் இவன்! என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[5]
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்
பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[6]
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த,
உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

[7]
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்-
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[8]
தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்-
வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[9]
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

[10]
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்  
பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம்‌ - சனிக்கிரக தாக்குதல்‌ நீங்க ஓத வேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

[1]
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

[2]
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

[3]
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

[4]
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

[5]
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

[6]
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

[7]
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

[8]
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

[9]
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

[10]
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!  
பண் - பழந்தக்கராகம்   (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம்.

Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[1]
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னை
மனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்
நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[2]
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
என் அடியான் உயிரை வவ்வேல்! என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[3]
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!
தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[4]
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[5]
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,
கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!
அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[6]
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்
ஏறு கொண்டாய்! சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[7]
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,
அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[8]
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,
சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்
நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[9]
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,
தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;
துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[10]
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்  
பண் - காந்தாரம்   (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)

வினை நீக்கம்‌ - கேட்பவர்‌ வினை நீங்க ஓத வேண்டிய பதிகம்‌

Audio: https://www.youtube.com/watch?v=jv1Ayp2UmWQ
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.

[1]
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.

[2]
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த,
மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.

[3]
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர்,
ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.

[4]
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.

[5]
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.

[6]
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி,
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த,
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.

[7]
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,
முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்,
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

[8]
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்
செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.

[9]
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,
சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.

[10]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.085  
வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.

Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

[9]
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.

[10]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.111  
தளிர் இள வளர் என  
பண் - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக

Audio: https://www.youtube.com/watch?v=I3ZgtC3Dewg
தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[1]
வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண
உடைமேல் ஓர்
பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல
கடைதொறும் பலி தேர்வார்;
சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர்
வண்ணர் தம் அடி பரவ,
வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[2]
பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா
நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன்
ஆவார்;
சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை
மேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[3]
எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி
அரவினொடு, ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர்
செய்த விகிர்தனார்;
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த
வாய்மையர்; பொன்மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர்
அடிகள் வருவாரே.

[4]
அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி
கொள, உடல் திமில,
நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல்
உமை நடுங்க
வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப்
போர்த்து, அதன் நிறமும் அஃதே,
வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[5]
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல்
அவை பரவ,
எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில்
அவை இசைய வல்லார்;
சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு
பெய்து,
வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[6]
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர்
கன மணி சேர்
முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
பெய, முறுவல் செய்வார்;
பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
மிளிர்வது ஒர் அரவினொடும்,
வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[7]
கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்;
வீணையர்; தாமும் அஃதே;
எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார்
உறைவது ஒர் இடம் வினவில்,
பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி
எதிர் கொணர்ந்து பெய்ய,
வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[8]
ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு
ஏறி,
கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர்
செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன்
சடைமேல் திகழ்கின்ற
வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[9]
சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண்
நீற்றினர்; சுடர் மழுவர்;
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு
;நூல் அவை பசைந்து இலங்க,
கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி
எதிர் கொணர்ந்து பெய்ய,
வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[10]
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
உலகுக்கு ஓர் தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.006  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் கொட்டமே கமழும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற

Audio: https://www.youtube.com/watch?v=Fu2dZdfFYQw
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[1]
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[2]
குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[3]
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறு அணி தலைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[4]
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[5]
ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[6]
ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[7]
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[8]
பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பு அரியான் கழல் உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[9]
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[10]
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  
பண் - கொல்லி   (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=EFcH79qtezA Audio: https://www.youtube.com/watch?v=zpZCGZOpaeY Audio: https://sivaya.org/audio/3.024 Mannanil Nalla Vannam.mp3
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[2]
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம்
வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;
கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!

[3]
அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே!
நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!

[4]
அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே!
விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும்,
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[5]
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்,
சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்
பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!

[6]
குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே!
நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும்,
கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!

[7]
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட,
நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே,
கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!

[8]
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர்
அடியொடு முடி அறியா அழல் உருவினன்;
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!

[9]
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்
ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்!
கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!

[10]
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  
பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க

Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்,
வம்பு நாள்மலர் வார் மது ஒப்பது;
செம்பொன் ஆர் திலகம், உலகுக்கு எல்லாம்;
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

[2]
நெக்கு உள், ஆர்வம் மிகப் பெருகி(ந்) நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

[3]
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்;
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன், நாமம் நமச்சிவாயவே.

[4]
கொல்வாரேனும், குணம் பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

[5]
மந்தரம்(ம்) அன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

[6]
நரகம் ஏழ் புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்-
வரதன் நாமம் நமச்சிவாயவே.

[7]
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
தலம் கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி, வாய்மொழி செய்தவன் உய் வகை
நலம் கொள் நாமம் நமச்சிவாயவே.

[8]
போதன், போது அன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான் முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பு அரிது ஆகி, அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

[9]
கஞ்சி மண்டையர், கையில் உண் கையர்கள்
வெஞ் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்-
விஞ்சை அண்டர்கள் வேண்ட, அமுது செய்
நஞ்சுஉண் கண்டன் நமச்சிவாயவே.

[10]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!  
பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம்

Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms Audio: https://sivaya.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[1]
சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[2]
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[3]
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! அஞ்சல்! என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[4]
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!

[5]
தஞ்சம்! என்று உன் சரண் புகுந்தேனையும்,
அஞ்சல்! என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[6]
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!

[7]
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[8]
தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[9]
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! அஞ்சல்! என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!

[10]
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.073  
பாடல் மறை, சூடல் மதி,  
பண் - சாதாரி   (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்க

Audio: https://www.youtube.com/watch?v=sKE5tlWTjIk
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

[1]
நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்;
காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான்,
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.

[2]
காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம் ஆளுமவரே.

[3]
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே.

[4]
மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர்
பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்;
வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு வெள்விடையினான்;
உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே

[5]
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல், தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர், மிகவே.

[6]
பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும் இல ஆய்,
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே.

[7]
நேசம் மிகு தோள் வலவன் ஆகி, இறைவன் மலையை நீக்கியிடலும்,
நீசன் விறல் வாட்டி, வரை உற்றது உணராத, நிரம்பா மதியினான்,
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இல ஆய்
நாசம் அற வேண்டுதலின், நண்ணல் எளிது ஆம், அமரர் விண்ணுலகமே.

[8]
தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.

[9]
தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர்
மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.

[10]
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4 -ஆம் திருமுறை   பதிகம் 4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று  
பண் - திருவிருத்தம்   (திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள

Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல
மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல்
துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே!

[1]
ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்! என்று அரும் பிணிநோய்
காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின்
பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே!

[2]
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல்
இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள்
தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே!

[3]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5 -ஆம் திருமுறை   பதிகம் 5.003  
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  
பண் - திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )
இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள

Audio: https://www.youtube.com/watch?v=zCMa42N_hJg
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[1]
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[2]
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[3]
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[4]
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[5]
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை,
விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[6]
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[7]
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.

[8]
காழியானை, கன விடை ஊரும் மெய்
வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.

[9]
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[10]
Back to Top
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

palan tharum paadal