சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

திருப்புகழில் பக்தி மார்க்கம்

73 நிறுக்குஞ் சூதன (திருச்செந்தூர்) - அழிவில்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்துக்களையும், வாசம் மிகுந்த கடப்ப மாலையையும், திருமுகங்களின் ஒளியையும் நாள்தோறும் நான் என் மனக் கண்ணில் நினைக்கும்படி அருள் புரிவாயாக

171 நிகமம் எனில் (பழநி) - உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக

874 தரையினில் வெகுவழி (கூந்தலூர்) - நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக.

1086 அகிலநறுஞ் சேறு (பொதுப்பாடல்கள்) - ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும்.

1072 இருந்த வீடும் (பொதுப்பாடல்கள்) - நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் மற்றும் எல்லாம் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக

847 எருவாய் கருவாய் (திருவீழிமிழலை) -உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

485 எலுப்புத் தோல் (சிதம்பரம்) எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக.

362 குருதி புலால் என்பு (திருவானைக்கா) - இரத்தம், ஊன், எலும்புகள், தோல், நரம்புகள், கிருமிகள், காற்று, நீர், மாமிசம், நெருங்கிய குடல்கள், கொழுப்பு, மயிர்கள், மூளை முதலியன நிறைந்த உடல் என்னும் குடிசையுள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகளாகிய வேடர்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலக் காட்டிலே ஓடுகின்ற, கெட்ட ஆசை கொண்ட வஞ்சகர்கள், மகா பொல்லாதவர்கள், பஞ்சமா பாதகச் செயல்களை செய்ய, அதன் காரணமாக, வேதங்கள், புராணங்கள், ஆகம நூல்களில் சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, தேவ பூஜை, வழிபாடு தோத்திரம், நாடிச் செய்யும் தியானம் முதலியவற்றில் ஒன்றையேனும் முயற்சித்து அநுஷ்டிக்காமல் அறிவிலியாய், பயனில்லாது, ஆசைகளை எழுப்புவதுமாய் உள்ள ஆணவக்காரர்களுடன் கூட்டுறவில் ஆழ்ந்து வருந்திய குற்றம் அற்றுப் போவதற்கும், ஆனந்தமான பேரின்ப வீட்டை யான் கண்டுகொள்வதற்கும் நீ அருள்வாயாக.

852 எகினி னம்பழி (திருப்பந்தணை நல்லூர்) - ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல் அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக.

357 ஆலம் வைத்த (திருவானைக்கா) உடலெங்கும் நடுக்கத்துடன் பித்தமும் அதிகமாக ஏற்பட்டு, தலையில் எழுதியுள்ள விதியின்படி, அதன் காரணமாக பூமியில் பொய்யன் என்று பெயர் பெற்று, பல துன்பங்களுக்கு ஆளாகி, புழுக்கள் வாழும் மலப் பிண்டமாகிய, இந்த உடலை (பிறவியை) பேணி வளர்க்கும் எனக்கு உனது திருவருளைத் தந்து அருள வேண்டும்.

497 இருளும் ஓர்கதிரணு (சிதம்பரம்) இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத தேவலோகத்தை யான் அடைந்து, என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக.

851 இருவினையஞ்ச (திருப்பந்தணை நல்லூர்) சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

200 வேய் இசைந்து (பழநி) - ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக.

898 ஈயெறும்பு நரி (வாலிகொண்டபுரம்) - ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக.

122 உலகபசு பாச (பழநி) - உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக.

1090 உறவின் முறையோர் (பொதுப்பாடல்கள்) உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், மனமும் உ(ன்)னி வேட்கை மிகவும் உன(து) தாள்கள் எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக.

5 விடமடைசு வேலை (விநாயகர்) - அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக

10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) - விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே.

32 இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்) - விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக

113 ஆலகாலம் என (பழநி) - உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக.

228 பாதி மதிநதி (சுவாமிமலை) - யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக.

230 மருவே செறித்த (சுவாமிமலை) - என்னிடம் அன்பு மாறாமலும், என் பிழைகளைப் பொறுத்து உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக அருள் புரிவாயாக.

473 செம் கலச (சிதம்பரம்) - உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.

489 இணங்கித் தட்பொடு (சிதம்பரம்) - கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக.

547 அங்கை நீட்டி (திருசிராப்பள்ளி) - வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக

611 ஆதிமக மாயி (ஊதிமலை) - முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய்

615 கொண்டாடிக் கொஞ்சும் (தென்சேரிகிரி) - தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப் பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப் பொருளை அருள்வாயாக.

639 எதிரிலாத பத்தி (கதிர்காமம்) - சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக.

655 அருவரை எடுத்த (வயிரவிவனம்) - உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக.

695 திரைவார் கடல் (திருமயிலை) - குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக.

710 அனுத்தே னேர்மொழி (திருப்போரூர்) - விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. -

712 சீர் உலாவிய (திருப்போரூர்) - சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் அறிவை வழங்கி அருள் செய்வாயாக.

738 விடமும் வேலன (திருவதிகை) - கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக.

788 அமுதினை மெத்த (மாயூரம்) - ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.

796 பழியுறு சட்டகமான (திருவிடைக்கழி) - பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் படியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் . திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக.

825 உரை ஒழிந்து (த்ரியம்பகபுரம்) - செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக

857 கொந்தார் மைக்குழல் (திருப்பனந்தாள்) - இந்த அற்பனின் மனம் அலைந்து அலைந்துத் திரியாமல், அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளைஇதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக.

918 கார் அணியும் குழல் (திருத்தவத்துறை) - பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக.

938 சந்திதொறும் நாணம் (சிங்கை) - அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக.

957 ஆனைமுகவற்கு (மதுரை) - உன் இரு திருவடிகளிலும் வீழ்ந்து பொருந்தும் பதவியில் நல்வாழ்வோடு நான் சிறந்து விளங்க அருள் புரிவாயாக.

முத்து நவரத்நமணி (மதுரை) - பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.

997 தோடு மென்குழை (பொதுப்பாடல்கள்) - யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக.

1073 கலந்த மாதும் (பொதுப்பாடல்கள்) - தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும் இருக்கின்ற எனக்கு நான் மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து, உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக.

1084 கருதியே மெத்த (பொதுப்பாடல்கள்) - உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக.

1091 அளகநிரை குலைய (பொதுப்பாடல்கள்) - மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக.

1144 எத்தி இரு குழை (பொதுப்பாடல்கள்) - வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள் செய்வாயாக.

1153 குனகியொரு மயில் (பொதுப்பாடல்கள்) - நாயினும் கீழான அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக.

1162 ஞானா விபூஷணி (பொதுப்பாடல்கள்) - உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக.

1180 பூசல்தரும் கயலும் (பொதுப்பாடல்கள்) - சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக.

1235 குடிமை மனையாட்டி (பொதுப்பாடல்கள்) - உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக.

ச1315 ீர் சிறக்கும் மேனி (பழமுதிர்ச்சோலை) - அடடா என்று என்னைக் கூவி அழைத்து, உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, என வற்புறுத்தி, நீ அன்பு வைத்த திருவடி இதோ என்று கூறித் தந்து அருள் புரிவாயாக.

1330 வானவராதி யோர் (திருப்பூவணம்) - தீயகுணங்களைக் கொண்ட பாவியாகிய நான் உனது சேவடிகளைக் காண நீ அருளவேண்டும்.

Back to Top


This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh bakthi marga